பெரும்பாலான மாநிலங்கள் பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்திருக்கும்போது தமிழ்நாடு அரசு மட்டும் இயலாது என்று சொல்வது நியாயமற்றது என்றே தமிழ்நாட்டு மக்கள் நினைப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் மீதான மத்திய அரசின் வரி அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் நிலையில்,பெரும்பாலான மாநிலங்கள் வரியை குறைத்திருக்கும் போது, தமிழ்நாடு அரசு மட்டும் இயலாது என கூறுவது நியாமற்றது. மக்களை ஏய்த்துவிடலாம் என நினைக்காதீர்கள். வெண்ணெய் எது, சுண்ணாம்பு எது, என மக்கள் நன்கறிவர் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக,அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பெரும் ஏமாற்றம்:
“மத்திய அரசு பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு பத்து ரூபாயும் குறைத்துள்ள நிலையில், அதனைப் பின்பற்றி காங்கிரஸ் கட்சி ஆளும் மாநிலங்கள் உள்பட இந்தியாவில் உள்ள 25 மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியினை கணிசமாக குறைத்துள்ள நிலையில், தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியினை தமிழ்நாடு அரசு குறைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், 2014-ஆம் ஆண்டில் இருந்த அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்றும், இத்தகைய நடவடிக்கை தானாகவே மாநிலங்களின் வரியை குறைத்துவிடும் என்றும் மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் கூறியிருப்பது தமிழ்நாட்டு மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இந்தத் தருணத்தில், கேரளாவில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி ஒரு ரூபாய் குறைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, 06-06-2018 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பேசிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர், தற்போதைய முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாடு அரசு உடனடியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைப்பதற்கு மாநில அரசுக்கு இருக்கக்கூடிய அதிகாரத்திற்குட்பட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும்,அத்தியாவசியப் பொருட்களின் விலை அடித்தட்டு மக்களையும், குறிப்பாக, தாய்மார்களையும் பெரிதும் பாதிக்கக்கூடிய வகையிலே இருக்கிற காரணத்தாலே இதுபற்றி உடனடியாக அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டுமென்றும் கூறினார்.
நிதி அமைச்சரின் அறிவிப்பு:
கேரளாவை விட தமிழ்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவாக இருந்தத் தருணத்தில், அந்த மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி ஒரு ரூபாய் குறைக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசும் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர் தற்போதைய முதலமைச்சர் அவர்கள். ஆனால், இன்று மத்திய அரசு குறைத்ததோடு மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சி ஆளுகின்ற மாநிலங்களான பஞ்சாப், ராஜஸ்தான் உள்பட 25 மாநிலங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைக்கப்பட்டுள்ள நிலையில், இதனையடுத்து பெரும்பாலான மாநிலங்களில் தமிழ்நாட்டை விட பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவாக இருக்கின்ற நிலையில், தமிழ்நாட்டில் அதைச் செய்வதற்கான சாத்தியம் இல்லை என்று மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் அறிவித்திருப்பது வேதனைக்குரியது.
இது நியாயமற்றது:
மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் தனது அறிக்கையில் 01-08-2014, 02-11-2021 மற்றும் 04-11-2021 ஆகிய தேதிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் அடிப்படை விலை, மத்திய அரசின் வரிகள், மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரி உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு மத்திய அரசின் வரி அதிகரித்துக் கொண்டே செல்வதால் மாநில அரசின் வரியை குறைக்க இயலாது என்று கூறியிருக்கிறார். மத்திய அரசின் வரி என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்கிற நிலையில், பெரும்பாலான மாநிலங்கள் வரியைக் குறைத்திருக்கும்போது தமிழ்நாடு அரசு மட்டும் இயலாது என்று சொல்வது நியாயமற்றது என்றே தமிழ்நாட்டு மக்கள் நினைக்கிறார்கள்.
மத்திய அரசின் இந்த வரி விதிப்பு என்பது தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இருந்து வருகிறது. இதையெல்லாம் தெரிந்து கொண்டு தானே, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. அதில் ஏதாவது நிபந்தனை விதிக்கப்பட்டிருந்ததா? இல்லையே! ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோலுக்கு மட்டும் தானே லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது.
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல்:
தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினால், 2014 ஆம் ஆண்டு இருந்த அளவிற்கு பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள். அப்பொழுதும் மாநில அரசின் வரி விகிதத்தை குறைப்பேன் என்று சொல்லாமல், மத்திய அரசின் வரிக் குறைப்பால் மாநில அரசின் வரிவிதிப்பு தானாக குறைந்துவிடும் என்று கூறுகிறார். இது மக்களை ஏமாற்றும் செயல். அதேசமயத்தில், வாக்குறுதியே அளிக்காத பல மாநிலங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை கணிசமாக குறைத்துள்ளன.தி.மு.க.வின் இந்த அறிவிப்பு, ஏற்கெனவே விண்ணை முட்டும் அளவுக்கு நாளொறு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உயர்ந்து கொண்டே செல்லும் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் காய்கறிகளின் விலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.
இந்தத் தருணத்தில், “சாதாரண மக்களை யார் வேண்டுமானாலும் ஏய்த்துவிட முடியும் என்று நினைக்காதீர்கள். சாமான்யன் நிரம்ப படித்தவனாக இல்லாது இருக்கலாம். அவன் வளமான பொது அறிவு பெற்றிருக்கிறான். வெண்ணெய் எது சுண்ணாம்பு எது என்கிற வித்தியாசம் அவனுக்குத் தெரியும்” என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நினைவூட்ட கடமைப்பட்டிருக்கிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.