வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்காதீர்கள்! விபரீத கண் நோய்கள் தாக்க கூடும் !
ஸ்மார்ட் போன்களை வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்து உற்று நோக்கி வீடியோ கேம் விளையாடும் குழந்தைகளுக்கு வருங்காலத்தில் விபரீத கண் நோய்கள் தாக்க கூடும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
வெயிலோ.. மழையோ விடுமுறை என்றால் வீட்டிற்கு வெளியே சிறுவர் சிறுமிகளின் விளையாட்டுக்கும், அவர்களது உற்சாக துள்ளலுக்கும் அளவே இருக்காது..! உடலுக்கு வலுவையும், உள்ளத்துக்கு புத்துணர்ச்சியையும் கொண்டு சேர்த்த அந்த விளையாட்டுக்களை மறந்து தற்போது சோம்பேறிகளாக மாறி வருகின்றனர் இன்றைய குழந்தைகள்..!
பெரும்பாலும் நடுத்தர மற்றும் வசதி படைத்த வீட்டுக்குழந்தைகள் தற்போது வெளியில் சென்று விளையாடுவதை தவிர்த்து வருகின்றனர். காரணம் கையில் ஸ்மார்ட் போனோ அல்லது டேப்லட்டோ வைத்துக் கொண்டு லாரி ஓட்டுவது, கார் ஓட்டுவது, ரெயிலை இயக்குவது, விமானத்தை இயக்குவது போன்ற வீடியோ கேம் விளையாடுவதில் அடிமையாகி கிடக்கின்றனர்.
இவர்கள் கையில் ஸ்மார்ட் போன் மற்றும் டேப் போன்றவற்றை கொடுத்து, நமது குழந்தைகள் வீட்டுக்குள் பாதுகாப்பாக விளையாடுவதாக பெற்றோர் நினைத்துக்கொள்கின்றனர். உண்மையில் தங்கள் குழந்தையின் கண்களையும், உடல் நலனையும், விலைகொடுத்து கெடுக்கின்றனர் என்பதே உண்மை
ஸ்மார்ட் போன் கேம்களில் மூழ்கி காலத்தையும் , நேரத்தையும் வீணடிக்கும் குழந்தைகள், மற்ற குழந்தைகளுடன் ஒன்றிணைய சிரமப்பட்டு, உடல் திறனற்ற குழந்தைகளாக சமூகத்திலிருந்து விலகி தனிமைப்படும் சூழலுக்கு ஆளாகும் ஆபத்து உள்ளது.
துப்பக்கியால் சுடுவது, சண்டை போடுவது, போன்ற வன்முறையை தூண்டும் வீடியோ கேம்களை விளையாடும் குழந்தைகளின் மனநிலை அவர்களை வருங்காலத்தில் வன்முறையாளனாகவே மாற்றிவிடும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.
எந்தவகை செல்போனாக இருந்தாலும் 14 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் உபயோகப்படுத்த வேண்டும் என்று செல்போன் நிறுவனங்களே அறிவுறுத்தினாலும் பெற்றோர் அதனை கண்டு கொண்டதாக தெரியவில்லை என்று ஆதங்கப்படும் மருத்துவர்கள் வருங்காலத்தில் இத்தகைய குழந்தைகளுக்கு விபரீத கண்நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கின்றனர்
இதை மனதில் வைத்து தான், தனது குழந்தைகளுக்கு ஒரு போதும் ஸ்மார்ட் போன்களை கொடுக்க மாட்டேன் என்று ஐ போன்களை தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் உரிமையாளர் ஸ்டீவ் ஜாப்ஸ் கூறியிருந்தார்..!
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.