விஷேச நாட்களில் பைக் ரேஸ்: போலீஸார் சோதனையில் சிக்கிய இளைஞர்கள்..!

Default Image

சென்னையில் முக்கிய நாட்களில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களால் விபத்து ஏற்படுகிறது. இதைத் தடுக்க நேற்று போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டு சோதனை செய்ததில் ஏராளமான வாகனங்கள் சிக்கின.

சனி, ஞாயிறு இரவு, முக்கிய விஷேச தினங்களில் சென்னையில் உள்ள மோட்டார் சைக்கிள் ஓட்டும் இளைஞர்களில் குறிப்பிட்ட வகையினர் சென்னை கடற்கரைச் சாலை, அடையாறு, ராதாகிருஷ்ணன் சாலை போன்ற இடங்களில் மோட்டார் சைக்கிள் ரேஸில் ஈடுபட்டு வருவது சமீப காலமாக வாடிக்கையாகி வருகிறது. சிலர் சாகசத்திலும் ஈடுபடுகின்றனர்.

இவ்வாறு வரும் இளைஞர்கள் நூற்றுக்கணக்கில் மோட்டார் சைக்கிளில் மொத்தமாக பயணிக்கும்போது சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது மோதுகின்றனர். இதனால் அப்பாவிகள் காயமடைகின்றனர், உயிரிழக்கின்றனர். சமீபத்தில் பிரபல டான்ஸர் ஒருவர் இது போன்ற ரேஸ் ஓட்டிய இளைஞர்கள் மோதியதில் தூக்கி எறியப்பட்டு உயிரிழந்தார். பத்து நாளில் வெளிநாட்டுக்கு செல்லவிருந்த நிலையில் விபத்தில் சிக்கி டான்ஸர் உயிரிழந்தார்.

இதுபோன்ற பல சம்பவங்கள் சென்னையில் வாடிக்கையாகி வருகின்றன. இரண்டிரண்டு இளைஞர்கள் இருபதுக்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் ஒன்றாக வரும்போது பொதுமக்கள் அச்சத்துடன் கேள்வி கேட்காமல் விலகிச் செல்வது அவர்களுக்கு மேலும் ஊக்கம் தர, போக்குவரத்து விதிகளை மீறி வாகனத்தை இயக்குகின்றனர்.

பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களின் பெற்றோர்கள் செல்லம் கொடுக்கிறேன் என்ற பெயரில் அவர்களுக்கு வாகனங்களை வாங்கிக் கொடுப்பதும், நள்ளிரவில் வெளியே சுற்ற அனுமதிப்பதும் இது போன்ற செயல்கள் அதிகரிக்கக் காரணமாக அமைகிறது.

கடந்த வாரம் இவ்வாறு பைக் ரேஸ் செல்லும் இளைஞர்கள் முதல்வர் இல்லம் அருகே ரேஸில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த செய்தி வெளியான மறுநாளும் அதே பகுதியில் ரேஸில் ஈடுபட்ட சில இளைஞர்களைப் போலீஸார் பிடித்தனர். இந்நிலையில் நேற்றிரவு இஸ்லாமியர்களின் முக்கிய நோன்பு தினமாகும், இந்நாளில் நள்ளிரவு வரை தொழுகை நடத்துவார்கள்.

சமீப ஆண்டுகளில் இந்நாள் இரவில் இஸ்லாமிய இளைஞர்கள் மட்டுமல்லாமல் ஏராளமான இளைஞர்கள் மெரினா, பெசன்ட் நகர், அடையாறு, பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளில் ரேஸ் நடத்துகின்றனர். இதில் விபத்து நடப்பதும் உண்டு. இதையடுத்து காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் ஆயிரக்கணக்கான போலீஸார் நேற்றிரவு மெரினா உள்ளிட்ட முக்கிய சாலைகளில் குவிக்கப்பட்டனர்.

100 மீட்டர் இடைவெளியில் சாலைத்தடுப்புகள் அமைக்கப்பட்டு மோட்டார் சைக்கிளில் வரும் இளைஞர்கள் கண்காணிக்கப்பட்டனர். அடையாறு திரு.வி.க.பாலம், மெரினா ஆகிய இடங்களில் பைக் ரேஸில் ஈடுபட்டவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

இதையும் மீறி ரேஸ் ஓட்டிய 42 மோட்டார் சைக்கிள்களை போலீஸார் பிடித்துப் பறிமுதல் செய்தனர். அந்த இளைஞர்களின் பெற்றோரை நேரில் அழைத்து எச்சரித்து, வழக்குப் பதிவு செய்த பிறகு வாகனம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிகிறது.

இதேபோல் நேற்று முன்தினம் இரவு முதல் திங்கள் அதிகாலை வரை 16 இடங்களில் வழிப்பறிச் சம்பவங்கள் நடைபெற்றன. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீஸார் 13 பேரை கைது செய்தனர். இதையொட்டியும் வடசென்னை தென் சென்னை பகுதிகளில் நேற்று இரவு அதிக எண்ணிக்கையிலான வாகன சோதனைகளும், ரோந்துப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் சோதனையில் பழைய குற்றவாளிகள், குற்றப் பின்னணி உள்ள நபர்கள் மற்றும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளைக் கைது செய்யவும், கண்டுபிடித்து விசாரிக்கவும், அவர்களைக் கண்காணிக்கவும், நீதிமன்றப் பிடியாணைகளை நிறைவேற்றவும் மற்றும் வாகனத் தணிக்கை செய்யவும் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஆய்வாளர் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் மற்றும் தலைமைக் காவலர்கள் அடங்கிய பல சிறு குழுக்களாக பிரிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும்,  740 தங்கும் விடுதிகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

நேற்று நடத்தப்பட்ட சோதனையில், சந்தேகத்தின் பேரில் 300 நபர்களும், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் 1125 நபர்களும், குற்றப் பின்னணியுடைய 1325 நபர்களும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட குற்றவாளிகள் 32 நபர்களும், தலைமறைவு குற்றவாளிகள் 15 நபர்களும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிய 71 நபர்களும், போக்குவரத்து விதிகளை மீறிய 51 நபர்களும், குடிபோதையில் வாகனம் ஓட்டிய 159 நபர்களும் வாகனத் தணிக்கையின் போது பிடிபட்டனர்.

மேலும், வாகனத் தணிக்கையில் 1226 நான்கு சக்கர வாகனங்கள், 1193 மூன்று சக்கர வாகனங்கள், 7329 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 9748 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டது. அதில் முறையான ஆவணங்கள் இல்லாத 69 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்றால் இரவில் வழிப்பறி நடப்பது குறையும் என்று பொதுமக்கள் விருப்பம் தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்