விவசாயிகள் சென்னை – சேலம் 8 வழி பசுமை சாலைக்கு கடும் எதிர்ப்பு!

Default Image

அரசு சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க  முடிவு செய்து உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்தப்படும் போது, சேலம் மாவட்டத்தில் அரமனூர், மஞ்சுவாடி, ஆச்சாங்குட்டப்பட்டி, கத்திரிப்பட்டி, மூக்கனூர், ஆச்சாங்குட்டப்பட்டி புதூர், குப்பனூர், அயோத்தியாப்பட்டணம், மாசிநாயக்கன்பட்டி, உடையாப்பட்டி, எருமாபாளையம், சுக்கம்பட்டி, வெள்ளையப்பட்டி, குள்ளம்பட்டி, மின்னாம்பள்ளி, சின்னகவுண்டாபுரம், பாரப்பட்டி, சித்தனேரி, உத்தமசோழபுரம், பூலாவரி அக்ரகாரம் உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும். அதே போன்று பல்வேறு பகுதிகளில் உள்ள பலரது வீடுகளும் இடிக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

இந்த திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த முதல் கட்ட பணியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். இந்த நிலையில் இந்த திட்டம் செயல்படுத்தினால் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விவசாயம் முற்றிலும் பாதிப்படையும். எனவே பசுமை வழி சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று விவசாயிகள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில வாரங்களாக திங்கட்கிழமை தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் மனுக்களை கொடுத்து வந்தனர். இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் தலைமையில் பல கட்ட பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. பேச்சுவார்த்தையின் போது 8 வழி பசுமை சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில் சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஆட்சேபனை மனுக்களை அளிக்கலாம் என்றும், இதற்கான இறுதி கட்ட முகாம் 14-ந்தேதி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் தனித்தாசில்தார்கள் அன்புக்கரசி, பத்மபிரியா, பெலிக்ஸ்ராஜா, செம்மலை, வெங்கடேஷ் ஆகியோர் தலைமையில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் ஒவ்வொரு குழுவிலும் ஒரு வருவாய் அதிகாரி உள்ளிட்ட 3 அலுவலர்கள் இடம் பெற்று இருந்தனர்.

இதையொட்டி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மனு கொடுப்பதற்காக கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர். பின்னர் அவர்கள் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், எங்கள் விவசாய நிலத்தை எடுக்ககூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்து அந்தந்த பகுதி தாசில்தாரிடம் ஆட்சேபனை மனுக்களை கொடுத்தனர். மேலும் விவசாய நிலத்தை கையகப்படுத்தினால் தீக்குளிக்கவும் தயங்கமாட்டோம் என்று கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.கே.செல்வம் தலைமையில் பூலாவரி உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆட்சேபனை மனு கொடுத்தனர். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறும் போது, 8 வழிச்சாலை அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்தும் நடவடிக்கையில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த திட்டத்துக்கான முழு வரைபடம், எப்படி செயல்படுத்த உள்ளார்கள்?, பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு என்ன இழப்பீடு வழங்கப்படும் என்று கேட்டு இருந்தோம். ஆனால் இந்த முகாமில் கலந்து கொண்ட அலுவலர்கள் அதற்கு பதில் அளிக்கவில்லை.

கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ஒரு ஏக்கருக்கு ரூ.1 கோடி முதல் ரூ.3 கோடி ஆகும். ஆனால் அரசு ஒரு ஏக்கருக்கு ரூ.8 லட்சம் மட்டுமே இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது. ஆனால் ஒரு ஏக்கருக்கு ரூ.50 கோடி இழப்பீடு வழங்கினாலும் நிலத்தை அளிக்க மாட்டோம். இந்த திட்டம் செயல்படுத்தினால் விவசாயத்தையே நம்பி இருக்கிற மக்கள் மிகவும் பாதிப்படைவார்கள். எனவே 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும் என்று கூறினார்.

ஆட்சேபனை தெரிவித்து மனு கொடுக்க ஏராளமான விவசாயிகள் வந்ததாலும், இதனால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்கவும், சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சங்கர், துணை கமி‌ஷனர்கள் தங்கதுரை, சுப்புலட்சுமி ஆகியோர் தலைமையில் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

மேலும் மனு கொடுக்க வந்தவர்களை போலீசார் நுழைவு வாயிலிலேயே தடுத்து நிறுத்தி மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்த பிறகே அனுமதித்தனர். இதனால் நேற்று கலெக்டர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்