விழுப்புரம் அருகே குழந்தை கடத்த வந்ததாக எண்ணி வடமாநில இளைஞர்கள் தாக்கிய கிராம மக்கள்!
குழந்தை கடத்த வந்ததாக எண்ணி விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே வடமாநில இளைஞர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாத்தூர் கிராமம் அருகே சுற்றித் திரிந்த வடமாநில இளைஞர்கள் 5 பேரை குழந்தை கடத்த வந்ததாக எண்ணி கிராம மக்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். தகவலறிந்து வந்த கச்சிராபாளையம் காவல்துறையினர் இளைஞர்களை மீட்டு மருத்துவ உதவி செய்து விசாராணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் 5 பேரும் சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த SVN Borewells என்ற தனியாருக்குச் சொந்தமான ஆழ்துளைக் கிணறு அமைக்கும் லாரியில் வேலை செய்து வந்ததாகக் கூறியுள்ளனர். வேலையை முடித்துவிட்டு சம்பளம் கேட்டபோது, லாரி உரிமையாளர் மாதேஸ்வரன் தங்களை மிரட்டி விரட்டிவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்திய 50க்கும் மேற்பட்ட கிராமத்தினர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.