விபத்தில் மூளைச்சாவு அடைந்த பிளஸ்-2 மாணவரின் உடல் உறுப்புகள் தானம், 8 பேருக்கு மறுவாழ்வு!

Default Image

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா நங்கவள்ளி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி. அவருடைய மனைவி சாந்தி. இவர்களுடைய மகன் சக்திவேல்(வயது 16). பிளஸ்-2 மாணவர்.

இவர் கடந்த 19-ந் தேதி இரவு 7 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். வனவாசி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் இருந்து சக்திவேல் கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற பின்பு மேல் சிகிச்சைக்காக கோவை அவினாசி ரோட்டில் உள்ள கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சக்திவேலின் உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அவருடைய மாமா நல்லபிரபு மற்றும் குடும்பத்தினர் சக்திவேலின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இதையடுத்து சக்திவேலின் இதயம், கல்லீரல், 2 நுரையீரல்கள், 2 சிறுநீரகங்கள், 2 கண்கள் தானமாக பெறப்பட்டன.

இதில் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் ஆகியவை கே.எம்.சி.எச். மருத்துவமனைக்கும், இதயம், நுரையீரல்கள் ஆகியவை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கண்கள் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன. இதன் மூலம் 8 பேர் மறுவாழ்வு பெற்று உள்ளனர்.

இது குறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி கூறும்போது, மக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து அதிக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஒருவர் இறந்த பிறகு அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டால் அது பலரது உயிரை காப்பாற்ற உதவும் என்றார். தொடர்ந்து அவர் சக்திவேலின் உடல் உறுப்புகளை தானமாக வழங்க முன்வந்த அவருடைய குடும்பத்தினருக்கு நன்றியை தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்