” வாடகை செலுத்தாத கடைகளுக்கு ஆப்பு ” மாநகராட்சி நடவடிக்கை..!!
சென்னை மாநகராட்சி கடைகளுக்கு முறையாக வாடகை செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்கவும் மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சென்னை ,
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமாக 152 வணிக வளாகங்கள் உள்ளன. அதில் மொத்தம் 6 ஆயிரத்து 240 கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.12 கோடி வருவாய் கிடைத்தது. மாநகராட்சி வருவாயை உயர்த்தும் விதமாக, மாநகராட்சி கடைகளுக்கு, சந்தை மதிப்பில் வாடகை நிர்ணயிக்குமாறு அரசு உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு வணிக வளாகத்திலும் சந்தை வாடகையை நிர்ணயித்து மாநகராட்சி நிர்வாகம் அமல்படுத்தி வருகிறது. அதன் மூலம் ஆண்டுக்கு ரூ.37 கோடி வரை வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மாநகராட்சி கடைகளுக்கான வாடகை மிகவும் குறைவாக இருந்தது. இந்த கடைகள், ஒரு நபருக்கு 9 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படும். அதில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகையானது 15 சதவீதம் கூடும்.
அதனடிப்படையில் ஏற்கெனவே வாடகைக்கு விடப்பட்டு, குத்தகை காலம் 9 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அவற்றுக்கு சந்தை மதிப்பில் வாடகை மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சென்னை மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.37 கோடி வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுகளை விட ரூ.23 கோடி கூடுதல் வருவாயாகும். இந்த வாடகையை முறையாக செலுத்தா விட்டால், நடவடிக்கைகள் கடுமை யாக இருக்கும். கடைகளுக்கு சீல் வைப்பது, உரிமையாளர் மீது கிரிமினல் வழக்கு தொடர்வது என மேல்நடவடிக்கை எடுக்கப்படும். வாடகை உயர்த்தப்பட்டதற்கு ஏற்றவாறு, கடைகளையும் சீரமைத்திருக்கிறோம். அங்கு கழிவறைகளையும் கட்டி கொடுத்திருக்கிறோம். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
DINASUVADU