வழக்கறிஞர் என்று கூறி மோசடி செய்தவரின் வீட்டிலிருந்து கற்சிலைகள் கண்டெடுப்பு..!
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த ஆண்டகளூர் கேட்பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரிடம் வின்ஸ்டன் சர்ச்சில் என்பவர் 35 லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளார்.
கடனை திருப்பி கேட்ட போது தன்னை வழக்கறிஞர் என்று கூறி சர்ச்சில் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. நாளடைவில் வின்ஸ்டனின் நடத்தையில் சந்தேகமடைந்து ரமேஷ், விசாரித்ததில் அவர் வழக்கறிஞரே இல்லை என்பது தெரியவந்ததையடுத்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனையடுத்து ரமேஷின் கண்ணில் படாமல் போக்கு காட்டியுள்ளார் வின்ஸ்டன் சர்ச்சில். தனது ஆதரவாளர்களுடன் ஞாயிற்றுக்கிழமை வின்ஸ்டன் சர்ச்சில் வீட்டிற்கு சென்ற ரமேஷ், வீட்டிலிருந்தவர்களிடம் விசாரித்த போது சர்ச்சில் வீட்டில் இல்லை என்று கூறியுள்ளனர்.
இதனை நம்பாத ரமேஷ், வீட்டின் ஒரு அறையில் சர்ச்சில் மறைந்திருப்பதாக எண்ணி கதவை உடைத்தார். அறையினுள்ளே சர்ச்சில் இருப்பார் என்று நுழைந்த ரமேஷுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மறைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் கல்லால் செய்யப்பட்ட சாமி சிலைகள் இருந்தன. ரமேஷ் அளித்த தகவலின் பேரில், வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லால் ஆன 7 சாமி சிலைகள் உலோகத்தால் செய்யப்பட்ட அலங்கார வளைவு உள்ளிட்டவை சர்ச்சிலின் வீட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை கோவில்களிலிருந்து கடத்தப்பட்ட சிலைகளா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.