வந்தாச்சு ரமலான் இஸ்லாமியர்கள் உற்சாகம்..!
ரமலானின் வருகைக்காக மக்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். ரமலானுக்கான ஏற்பாடுகளையும் ஒரு மாதத்திற்கு முன்னரே தொடங்கிவிடுவார்கள். சிறப்பு தொழுகைக்காகவும் நோன்பு திறப்பதற்காகவும் ஏற்பாடுகள் செய்வதில் மும்முரமாக ஈடுபடுவார்கள். ரமலானில் முழுக்கவனத்தையும், வழிபாடுகளிலும், குர்ஆன் ஓதுதல், பாவமன்னிப்புக் கோருதல், தானதர்மம் வழங்குதல் ஆகியவற்றில் செலுத்த வேண்டியதிருப்பதால் ரமலானுக்கு முன்னரே முக்கிய வேலைகளை முடித்து வைப்பார்கள்.
ரமலானை எவரும் சுமையாக, கடினமாகக் கருதுவதில்லை. ஆழ்ந்து உறங்கும் இரவின் பின்பகுதியில் நோன்பு வைப்பதற்காக எழுந்து உணவருந்துதல், பகல் முழுவதும் உண்ணாதிருத்தல், இரவில் நீண்ட வழிபாடுகள், இவற்றுக்கிடையே அன்றாட அலுவல்கள் என்றிருந்தாலும் எல்லோரும் ரமலானை விருப்பமுடன் செய்வர்.
நோன்பு வைக்காதிருப்பவர்கள் மிகக் குறைவாகவே இருப்பர். குழந்தைகள், சிறார்கள், முதியோர், பெண்கள், வேலைக்குச் செல்வோர் என அனைத்துத் தரப்பினரும் நோன்பு வைப்பதிலிருந்து ரமலானின் மீது மக்கள் காட்டும் ஆர்வம் தெளிவாகிறது.
ரமலானின் மீது மக்களுக்கு ஏன் இவ்வளவு ஆர்வம். பிற மாதங்களைவிட ரமலானுக்கு ஏன் இப்படி மரியாதை, சிறப்பு? இதற்கான விடையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தருகின்றார்கள்.
‘மக்களே! மகத்துவமும் அருள்வளமும் மிக்க மாதம் உங்களை நெருங்கிவிட்டது. அந்த மாதத்தின் ஓர் இரவு (குர்ஆன் அருளப்படத் தொடங்கிய இரவு) ஆயிரம் மாதங்களைவிட சிறந்தவையாகும். இம்மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் கடமையாக்கி உள்ளான். இம்மாதத்தில் இரவுகளில் தொழுவது உபரிக் கடமையாக ஆக்கியுள்ளான். எவர் இந்த மாதத்தில் ஒரு உபரியான (கட்டாயமாக்கப்படாத) ஒரு நற்செயலைச் செய்கின்றாரோ அவர் ஒரு கட்டாயக் கடமையைச் செய்த நன்மையைப் பெறுவார். எவர் கட்டாயக் கடமையாக ஆக்கப்பட்ட ஒரு நற்செயலைச் செய்கின்றாரோ அவர் எழுபது நற்செயலை நிறைவேற்றியவர் போல் ஆவார்’.
‘இது பொறுமையின் மாதமாகும். பொறுமையின் கூலி சுவனமாகும். மேலும் இம்மாதம் சமூகத்திலுள்ள ஏழைகள், தேவையுடையோர் மீது அனுதாபப்பட்டு பரிவுடன் நடத்த வேண்டிய மாதமாகும். ஒருவர் இறைநம்பிக்கையுடனும், மறுமையில் நற்கூலியை பெறும் எண்ணத்துடனும் நோன்பு நோற்பாராயின் அவர் முன்னர் செய்த (சிறு) பாவங்களை இறைவன் மன்னித்துவிடுவான்’. (நூல் : புகாரி, முஸ்லிம்)
ரமலானில் இதுவும், இன்னும் பல நன்மைகளும், ஆன்மிக, ஒழுக்கப் பயிற்சிகளும் நிரம்பி இருப்பதாலும் இறைவனின் அருள் பொழியப்படுவதாலும் மக்கள் ரமலானை ஆர்வத்துடன் எதிர்பார்க்கின்றனர்.