வங்கியில் 3 கோடி ரூபாய் மோசடி!படத்தயாரிப்பாளர் கைது!
திரைப்பட தயாரிப்பாளர் இசக்கிராஜா உள்ளிட்ட 2 பேர் சொகுசுக் கார்கள் வாங்குவதாகக் கூறி, போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்று 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த இசக்கிராஜா என்பவர் சொகுசுக் கார்கள் வாங்குவதாகக் கூறி ஸ்டேட் வங்கியின் வேளச்சேரி கிளையில் 3 கோடியே 37 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
பின்னர் இந்தத் தொகையை வைத்து ‘ஒயிட் ஸ்கிரீன் புரொடக்சன்ஸ்’ என்ற படத்தயாரிப்பு நிறுவனம் மூலம் அருவா சண்ட என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில், ஸ்டேட் வங்கியின் சென்னை மண்டல மேலாளர் பத்மநாபன், சென்னை மாநகர காவல் ஆணையரிடம் அளித்த புகாரில், போலி ஆவணங்களை அளித்து கார் லோன் பெற்ற இசக்கிராஜன் பணத்தை திருப்பிச் செலுத்தாமல் முறைகேடு செய்ததாக தெரிவித்திருந்தார்.
கடன் தொகை 3 கோடி ரூபாயைக் கொண்டு கார் வாங்காமல், அருவா சண்ட திரைப்படத் தயாரிப்புக்காக செலவழித்திருப்பதாக அதில் குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில், மத்திய குற்றப் பிரிவு போலீசின் வங்கி மோசடி தடுப்பு பிரிவினர் இசக்கிராஜாவை கைது செய்தனர். அவருக்கு உதவியதாக, வங்கியின் வாகனக்கடன் பிரிவு அலுவலர் சித்ராவும் கைது செய்யப்பட்டார். மோசடியில் வங்கி மேலாளருக்கும் தொடர்பிருப்பதாக கருதும் போலீசார், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.