வங்கிக் கடன் மோசடி மன்னன் விஜய் மல்லையா நிதியமைச்சர் அருண் ஜெட்லியுடன் சந்திப்பு…!பாஜக அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை …!திமுக தலைவர் கடும் தாக்கு
மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கி விட்டு அதை திரும்பச் செலுத்தாத தொழில் அதிபர் விஜய் மல்லையா, லண்டன் தப்பிச் சென்றார். அவரை நாடு கடத்தக் கோரி இந்திய அரசு தொடர்ந்த வழக்கு லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்று லண்டன் நீதிமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய விஜய் மல்லையா, கடனை திரும்பச் செலுத்த தாம் தயாராக இருந்த போதும் வங்கிகள் அதை ஏற்றுக் கொள்ளாமல், தமது கடன் தீர்வு விண்ணப்பத்திற்கு நீதிமன்றத்தில் ஆட்சேபனை தெரிவித்ததாகவும் கூறினார்.
மேலும் நாட்டை விட்டு வெளியே செல்லும் முன்பு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து நிலைமையை சரி செய்ய முயற்சித்தேன் என்று விஜய் மல்லையா பரபரப்பு தகவல் தெரிவித்தார்.
இதற்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில், 2014 ஆண்டு முதல் தற்போது வரை என்னை சந்திக்க விஜய் மல்லையாவுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறினார்.
இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில்,வங்கிக் கடன் மோசடி மன்னன் விஜய் மல்லையா நிதியமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்ததாக கூறியிருப்பதன் மூலம்,பாஜக அரசு கார்ப்பரேட் முதலாளிகளின் கைப்பாவை என்பது நிரூபணமாகிறது. பிரதமர் நரேந்திர மோடி , அந்த ரகசிய பேச்சுவார்த்தையை மக்களுக்கு விளக்கிட வேண்டும். இல்லையென்றால் அவரை பதவி நீக்கம் செய்திட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.