தூத்துக்குடியில் வக்கீல் உள்பட 2 பேருக்கு அரிவாள் வெட்டு

Default Image

குலசேகரப்பட்டினத்தில் பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் ஐசுவர்யா நகரைச் சேர்ந்த கொடிமுத்து. இவருடைய மகன்கள் விஜயகுமார் (வயது 31), ரமேஷ் (29). விஜயகுமார், நெல்லை கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் விஜயகுமார் தன்னுடைய தம்பி ரமேஷ் மற்றும் உறவினர்கள் 4 பேருடன் ஒரு காரில் திருச்செந்தூர், குலசேகரன்பட்டினம், மணப்பாடு ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்றார்.
பின்னர் அவர்கள் அனைவரும் இரவில் குலசேகரன்பட்டினம்- உடன்குடி ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது பாரில் வாங்கிய உணவுப்பொருட்களுக்கு கூடுதலாக ரூ.120 வசூலித்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தட்டி கேட்ட விஜயகுமார், தாங்கள் ஏற்கனவே கூடுதலாக ரூ.25 வழங்கி உள்ளதாக கூறினார். இதனால் அவர்களுக்கும், பார் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த டாஸ்மாக் பார் உரிமையாளரான உடன்குடி வைத்தியலிங்கபுரத்தைச் சேர்ந்த சுடலைமுத்து (45), பார் ஊழியரான உடன்குடி பிள்ளையார் பெரியவன்தட்டைச் சேர்ந்த முத்துபாண்டி (39), இசக்கிபாண்டி உள்ளிட்ட 7 பேரும் சேர்ந்து, விஜயகுமார் உள்ளிட்டவர்களை கம்பாலும், அரிவாளாலும் தாக்கினர். இதில் விஜயகுமாரின் தலையிலும், அவருடைய உறவினரான பாளையங்கோட்டை என்.ஜி.ஓ.காலனியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் வைகுண்டராஜனின் (24) இடது கையிலும் அரிவாள் வெட்டு விழுந்தது. மேலும் ரமேசுக்கு காயம் ஏற்பட்டது.
படுகாயம் அடைந்த விஜயகுமார், ரமேஷ், வைகுண்டராஜன் ஆகிய 3 பேரையும் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுடலைமுத்து, முத்துபாண்டி ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான இசக்கிபாண்டி உள்ளிட்ட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்