ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு..!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந் தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் உண்டானது.
இதனால் வன்முறை வெடித்தது. கூட்டத்தை கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் கொல்லப்பட்டார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கலவரத்தில் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டது. பொது சொத்துக்களும் சேதப்படுத்தப்பட்டன.
இது தொடர்பாக போலீசார் 243 வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் ஒருங்கிணைப்பாளர் மதுரையை சேர்ந்த வக்கீல் வாஞ்சிநாதன் (வயது 37), தூத்துக்குடியை சேர்ந்த வக்கீல் அரிராகவன் உள்ளிட்ட 100 பேர் மீது தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.
எந்தவித முன் அனுமதியும் இன்றி 144 தடை உத்தரவை மீறி, போலீஸ் தடுப்புகளை சேதப்படுத்துதல், அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், வாகனங்களை எரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக வக்கீல் வாஞ்சிநாதன் உள்ளிட்டவர்களை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் ஒரு வழக்கு தொடர்பாக டெல்லி சென்றிருந்த வக்கீல் வாஞ்சிநாதன் நேற்று காலை விமானம் மூலம் சென்னை வந்தார். இதை அறிந்த தனிப்படை போலீசார் சென்னை விமான நிலையத்தில் வைத்து வக்கீல் வாஞ்சிநாதனை கைது செய்தனர்.
பின்னர் அவரை தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனர். விசாரணைக்கு பிறகு அவர் தூத்துக்குடி 3வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தமிழ்செல்வி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். அதன்பேரில் வக்கீல் வாஞ்சிநாதன் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே வக்கீல் வாஞ்சிநாதன் கைது செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், போலீசாரின் கைது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தூத்துக்குடியில் நேற்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டார்கள். இதன் தொடர்ச்சியாக இன்றும் தூத்துக்குடி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர். கோர்ட்டு முன்பாக வக்கீல்கள் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். போலீசாரின் கைது நடவடிக்கைகள் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.