லஞ்சம் வாங்கிய ஜெயிலர் அதிரடி மாற்றம் ..!
புழல் மத்திய சிறையில் ஜெயிலராக இருந்த ஜெயராமன், கைதியிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் ஆதாரத்துடன் சிக்கிய பிறகும் கூட நடவடிக்கைக்கு உள்ளாகாமல் தப்பி வந்த நிலையில் மதுரை மத்திய சிறைக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்
சென்னையை அடுத்துள்ள புழல் மத்திய சிறையின், விசாரணைக் கைதிகளுக்கான பிரிவின் ஜெயிலராக இருந்தவர் ஜெயராமன். கடந்த மார்ச் மாதம் 6ம் தேதி இரவு லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சிறை வளாகத்திற்கு அருகே ரசாயனம் தடவிய 40 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்க முயன்ற போது ஜெயில் வார்டன் பிச்சையாவை கையும், களவுமாக சுற்றி வளைத்தனர் அதிகாரிகள்
வார்டன் பிச்சையாவிடம் நடத்திய விசாரணையில் ஜெயிலர் ஜெயராமன் தான் லஞ்ச பணத்தை வாங்கி வர சொன்னதாகவும் வாக்குமூலம் அளித்தார். விசாரணை கைதியான மாஹீன் அபுபக்கர் என்பவரை பூந்தமல்லியில் பயங்கரவாதிகள் அடைக்கப்பட்டுள்ள சிறைக்கு மாற்றவுள்ளதாகவும், மாற்றாமல் இருக்க வார்டன் பிச்சையாவிற்கும், தனக்கும் தலா 20 ஆயிரம் தர வேண்டும் என ஜெயிலர் ஜெயராமன் மிரட்டியுள்ளார். இந்த விவகாரம் லஞ்ச ஒழிப்பு பிரிவுக்கு செல்ல, வார்டன் பிச்சையா மூலம் ஜெயிலர் ஜெயராமனும் சிக்கினார்.
இதையடுத்து ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து வார்டன் பிச்சையா கைது செய்யப்பட, இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜெயிலர் ஜெயராமன் மீது துறை ரீதியான நடவடிக்கை கூட இல்லை.
சிறையில் கைதிகளுக்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் சப்ளை, செல்போன் சப்ளை என கமிஷன் பெற்றுக் கொண்டு அனுமதித்து வந்துள்ளனர் புழல் சிறை அதிகாரிகள். கைதிகளுக்கு சட்ட விரோதமாக சலுகை வழங்க லட்ச கணக்கில் லஞ்சம் வாங்கி கல்லாக்கட்டியதாக ஜெயிலர் ஜெயராமன் மீது தொடர் புகார் எழுந்து வந்தது. லஞ்ச ஒழிப்பு சோதனைக்கு பிறகு அப்போதைய லஞ்ச ஒழிப்பு இயக்குனர் மஞ்சுநாதா சிறை துறை அதிகாரிகளுக்கு எழுதிய கடிதத்தில், சிறையில் லஞ்சத்திற்கு நடக்கும் சட்ட விரோத செயல்களை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனால் யார் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டதோ அந்த ஜெயிலர் ஜெயராமன் கையிலேயே அந்த கடிதம் கிடைக்க, லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகளை இடமாற்றம் செய்வேன் சவால் விட்டதாகவும் சிறைத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் கடந்த வாரம் லஞ்ச ஒழிப்பு பிரிவு இயக்குனர் மஞ்சுநாதா இடமாற்றம் செய்யப்பட்டதற்கும் இவர் தான் காரணம் எனவும் கூறப்படுகிறது. ஜெயிலர் ஜெயராமன் ஆடிய இத்தனை ஆட்டத்திற்கும் அவர், தமிழகத்தின் மூத்த அமைச்சர் ஒருவருடைய நெருங்கிய உறவினர் என்பது தான் காரணம் என கூறுகின்றனர். லஞ்ச புகாரில் சிக்கி வழக்கு பதிவு செய்யப்பட்டும் கூட இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாமல், கண் துடைப்பிற்காக தற்போது மதுரை மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.