ரூ.824 கோடி ரூபாய் 14 வங்கிகளில் மோசடியாக கடன் பெற்ற கனிஷ்க் உரிமையாளர் பூபேஷ்குமார் மீது சிபிஐ விசாரணை!

Default Image

கனிஷ்க் தங்க நகை நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமாரிடம், சென்னையில் எஸ்.பி.ஐ உள்ளிட்ட 14 வங்கிகளில் 824 கோடி ரூபாய் மோசடியாக கடன் பெற்ற விவகாரத்தில்  சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கனிஷ்க் நிறுவனம், இருப்பு மற்றும் விற்பனை கணக்குகளை மோசடியாக தயாரித்து, வங்கிகளில் கடன் பெற்றது தெரியவந்துள்ளது. ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, எச்.டி.எஃப்.சி., பேங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட 14 வங்கிகள் கனிஷ்க் நிறுவனத்துக்கு 824 கோடியே 15 லட்சம் ரூபாய் கடனாகக் கொடுத்துள்ளன. கடனுக்கு பல மாதங்களாக வட்டி கட்டப்படாததையடுத்து எஸ்.பி.ஐ வங்கி தலைமையிலான வங்கிகள் கூட்டமைப்பு சி.பி.ஐ.க்கு புகார் கடிதம் அனுப்பியது.

இதையடுத்து, கனிஷ்க் உரிமையாளர் பூபேஷ்குமார், அவரது மனைவியும் இயக்குநருமான நீதா ஜெயின், பங்குதாரர்களான தேஜ்ராஜ் அச்சா, அஜய் குமார், சுமித் கேடியா மற்றும் போலியான ஆண்டு நிதி அறிக்கை மூலம் கடனை அனுமதித்த வங்கி அதிகாரிகள், உடந்தையாக இருந்த ஆடிட்டர்கள் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.

டெல்லியில் இருந்து வந்து முகாமிட்டுள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் பூபேஷ் குமாரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று சோதனை மேற்கொண்டனர். பூபேஷ் குமார் ஜெயின், நீதா ஜெயின் ஆகியோரை நேற்று மாலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்துக்கு கொண்டுசென்ற சி.பி.ஐ. அதிகாரிகள் அதனைத் தொடர்ந்து பெங்களூருக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் அவர்கள் கைது செய்யப்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இதனிடையே நுங்கம்பாக்கம் கோத்தாரி சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் பூபேஷ் குமாருக்கு சொந்தமான 2 வீடுகளில் எஸ்.பி.ஐ. வங்கி சார்பில் ஏல நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. அதில் ஒரு வாரத்துக்குள் ஏலம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்