ரூ.217 கோடியில் கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையம்: சட்டப்பேரவையில் முதல்வர் தகவல்..!

Default Image

தமிழகத்தின் 49 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டத்துக்கு பதில் கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையம் ரூ.217 கோடியில் அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று 110-வது விதியின் கீழ் முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

ஊரகப் பகுதிகளில் குடியிருப்புகளின் சமையலறை, குளியலறையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சாலைகள் மற்றும் தெருக்களில் தேங்கி தொற்றுநோய் பரவாமல் பாதுகாக்க, தனிநபர் உறிஞ்சு குழிகள் அமைக்கப்படும்.

ஊரகப் பகுதிகளில் ஆழ்துளை கிணறு, மேல்நிலை குடிநீர் தொட்டி போன்ற நீர் அமைப்புகளைச் சுற்றி, கழிவுநீர் தேங்காமல் தடுக்க சமுதாய உறிஞ்சு குழிகள் அமைக்கப்படும். இவ்வாறு 2 லட்சத்து 500 உறிஞ்சு குழிகள் ரூ.168 கோடியே 94 லட்சத்தில் அமைக்கப்படும். இதன்மூலம், கழிவுநீர் வழிகட்டப்பட்டு நிலத்தடி நீர் செறிவூட்டப்படும்.

ஊரகப் பகுதிகளில் 1,000 அங்கன்வாடி மையங்கள் ரூ.87 கோடியில் கட்டப்படும்.

பழமையான 500 ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்களுக்கு பதிலாக ரூ.88 கோடியே 20 லட்சத்தில் புதிய கட்டிடங்கள் கட்டப்படும். பிரதமர் கிராம சாலை திட்டம் 2-ன்படி, ரூ.192 கோடியே 80 லட்சத்தில் 287 கி.மீ. நீள ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும். 10 மேம்பாலங்கள் கட்டப்படும்.

ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.1,200 கோடியில் 5,500 கி.மீ. நீள சாலைகள் மேம்படுத்தப்படும். ஊரகப் பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க, குக்கிராமங்களில் எதிர் சவ்வூடு பரவல் (ஆர்.ஓ.) குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ரூ.100 கோடியில் அமைக்கப்படும்.

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு அருகே உள்ள கிராம ஊராட்சிகளுக்கும், அடர்த்தியான மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட பெரிய கிராம ஊராட்சிகளுக்கும் தெரு வில் வைப்பதற்கான 60 ஆயிரம் குப்பைத் தொட்டிகள் ரூ.150 கோடியில் வழங்கப்படும்.

ஊரகப் பகுதிகளில் அரசு திட்டங்களின் கீழ் பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு, பழுதடைந்த நிலையில் உள்ள 45,594 வீடுகள், ரூ.227 கோடியே 97 லட்சத்தில் பழுது நீக்கித் தரப்படும்.

கடந்த 7 ஆண்டுகளில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.41,180 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2017-18 நிதியாண்டில் ரூ.7 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

அதையும் தாண்டி ரூ.8,332 கோடி வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுயஉதவிக் குழுக்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, நடப்பு ஆண்டில் ரூ.11 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்கப்படும்.

நகராட்சி நிர்வாகம்

தமிழகத்தில் 135 நகர்ப்புற உள்ளாட்சிகளில் 35-ல், பாதாள சாக்கடை திட்டம் முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேலும் 3 மாநகராட்சிகள், 25 நகராட்சிகளில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்துவதில் எதிர்கொள்ளும் சிரமத்தை கருத்தில் கொண்டு, மாற்று ஏற்பாடாக கசடு கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 51 நகராட்சிகள், 59 பேரூராட்சிகள் பயன்பெறும் வகையில் 49 நகரங்களில் கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையம் ரூ.217 கோடியில் அமைக்கப் படும்.

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை பணி மற்றும் குடிநீர் திட்டங்களில் குழாய் பதிக்கும் பணியின் காரணமாகவும், மழையாலும் சேதமடைந்த சாலைகளை மறுசீரமைக்கும் வகையில் நடப்பு ஆண்டில் 1,350 கி.மீ. நீளத்துக்கு ரூ.1,000 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும். பேரூராட்சிகளில் ரூ.200 கோடி மதிப்பிலான சாலை மேம்பாட்டு பணிகள் நபார்டு வங்கி நிதியில் மேற் கொள்ளப்படும்.

இவ்வாறு முதல்வர் தெரிவித் தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்