ராஜீவ்காந்தி கொலை வழக்கு:குற்றவாளி நளினியை விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது!உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Default Image

ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி நளினியை விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று  உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது .

இதற்கு முன் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி  சென்னை உயர் நீதிமன்றம், ராஜீவ் கொலை வழக்கில் தன்னை முன்கூட்டியே விடுவிக்கக்கோரி நளினி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் ஏப்ரல் 27ஆம் தேதி தீர்ப்பளிப்பதாகச் தெரிவித்தது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட ஏழு பேர் ஆயுள் தண்டனை கைதிகளாகக் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை விடுதலை செய்வது தொடர்பாகத் தமிழக அரசு சட்டப்பேரவையில் 2014இல் தீர்மானம் நிறைவேற்றியது. இதை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், 20 ஆண்டுகள் தண்டனை நிறைவு செய்தவர்களை முன்கூட்டியே விடுதலை செய்ய, 1994ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, தன்னை முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி 2015இல் சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் தீர்ப்பு அடிப்படையில் நளினி கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்கும்படி, 2016இல் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து நளினி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் சசிதரன், ஆர்.சுப்ரமணியம் அடங்கிய அமர்வு முன் நேற்று (ஏப்ரல் 23) விசாரணைக்கு வந்தபோது, அரசியல் சாசனம் 161இன்படி சிறையில் உள்ள கைதிகளை முன்கூட்டியே விடுவிக்கத் தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும், இந்த வழக்குக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே, இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்க எந்தத் தடையும் இல்லை. இந்த அரசாணையின் அடிப்படையில் 2,200 ஆயுள் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், அரசியல் சாசனம் 161இன்படி கைதிகளை முன்கூட்டியே விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இருந்தும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கினால் தமிழக அரசு எந்த முடிவும் எடுக்காமல் உள்ளதா எனக் கேள்வி எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், தமிழக அரசால் எந்த முடிவும் எடுக்க இயலாத நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கின் தீர்ப்பை இன்று (ஏப்ரல் 27ஆம் தேதி) நீதிபதிகள் ஒத்தி வைத்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி நளினியை விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட முடியாது என்று  உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது . முன்கூட்டியே விடுவிக்கக்கோரி நளினி தாக்கல் செய்த மனு தள்ளுபடி உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையிலுள்ளதால் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது என்று  உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி சசிதரன் அமர்வு தீர்ப்பு அளித்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்