ரயில்வே இணையமைச்சர் ராஜன் கோகைன் செங்கோட்டை – புனலூர் இடையே அகலப்பாதையை திறந்து வைத்தார்!
2010ஆம் ஆண்டு செங்கோட்டை – கொல்லம் வழித்தடத்தில் மீட்டர்பாதையை அகலப்பாதை ஆக்குவதற்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் பின் கொல்லம் – புனலூர் இடையே அகலப்பாதைப் பணிகள் முடிக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
செங்கோட்டை – புனலூர் இடையிலான 49கிலோமீட்டர் தொலைவில் பாலங்களைப் புதுப்பித்தல், குகைகளை அகலப்படுத்துதல் எனப் பல வேலைகள் நடைபெற்றதால் நீண்டகாலத்துக்குப் பின் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பாதையைப் போக்குவரத்துக்காகத் திறந்துவிடும் விழா புனலூரில் இன்று நடைபெற்றது. இதில் ரயில்வே இணையமைச்சர் ராஜன் கோகைன் கலந்துகொண்டு பாதையைப் போக்குவரத்துக்காக ஒப்படைத்தார். அப்போது பேசிய அவர், தாம்பரம் – கொல்லம் இடையே விரைவு ரயில் அறிமுகப்படுத்தப்படும் என்றும், பாலக்காடு – புனலூர் பாலருவி விரைவு ரயில் திருநெல்வேலி வரை நீட்டிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த விழாவில் மத்தியச் சுற்றுலாத்துறை அமைச்சர் அல்போன்ஸ், கொல்லம் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமச்சந்திரன், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி, மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.