ரயிலில் சிறுமியிடம் சில்மிஷம்.! டிக்கெட் பரிசோதகர் பணி இடைநீக்கம்..!
சென்னையை சேர்ந்த ஒரு தம்பதி, தங்களது மகளுடன் கடந்த 4-ந் தேதி ஊட்டிக்கு சென்றனர். பின்னர், கோவை வந்த அவர்கள் அங்கிருந்து சென்னை வரும் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தனர். இந்த ரெயில், சேலம்-ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்து கொண்டிருந்தது.
அப்போது, ரெயிலில் இருந்த டிக்கெட் பரிசோதகரான கோவையை அடுத்த போத்தனூர் காந்திநகரை சேர்ந்த அனீஷ்குமார் (வயது 25) என்பவர், அந்த தம்பதியின் 6 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தூங்கி கொண்டிருந்த அந்த சிறுமி திடீரென எழுந்து சத்தம் போட்டதால் அவளது பெற்றோர் மற்றும் சக பயணிகள், அனீஷ்குமாரை பிடித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தரப்பில் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனீஷ்குமாரை கைது செய்தனர். மேலும், அவர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில், டிக்கெட் பரிசோதகர் அனீஷ்குமாரை பணி இடைநீக்கம் செய்து சேலம் ரெயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் விஜூவின் உத்தரவிட்டுள்ளார்.