ரஜினிக்கும், எங்களுக்கும் சம்பந்தமே இல்லை தேசிய செயலாளர் எச்.ராஜா பேட்டி..!
மத்தியில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. பிரதமர் மோடி அறிவுரையின்படி பா.ஜனதா அரசின் சாதனைகள் பற்றி அனைத்து தரப்பு மக்கள், சமுதாய தலைவர்கள் மற்றும் ஊர் பிரமுகர்களிடம் நேரில் எடுத்துரைக்க சென்று வருகிறேன். அவர்களை சந்தித்து பா.ஜனதா அரசின் சாதனைகள் பற்றி எடுத்துரைத்து வருகிறேன். 26 கோடி மக்களுக்கு வங்கியில் புதிதாக கணக்கு தொடங்கியது. ரூ.12-க்கு விபத்து காப்பீடு என பல்வேறு சாதனைகளை பா.ஜனதா அரசு செய்து உள்ளது. பா.ஜனதா ஆட்சிக்கு வரும் முன்பு 9 கோடி வீடுகளில் கழிவறை வசதி கிடையாது. இப்போது பா.ஜனதா ஆட்சிக்கு பிறகு 7 கோடி வீடுகளில் கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே நக்சலைட்டுகள் ஊடுருவி விட்டனர். பொதுவாக மக்கள் போராட்டம் நடத்தும்போது அரசு பேச்சுவார்த்தை நடத்தினால் சமாதானம் அடைந்து கலைந்து சென்று விடுவார்கள். ஆனால் சமூக விரோதிகள் ஊடுருவலால் ஜல்லிக்கட்டு, தூத்துக்குடி போராட்டங்கள் பெரும் கவலையளிக்கும் விதமாக மாறிவிட்டது.
தூத்துக்குடி போராட்டத்தின் போது பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறிய ரஜினிகாந்த் தனது கருத்தை தெளிவாக கூறினார். அதை அரசியல் கட்சி தலைவர்கள் விமர்சித்து பேசுகிறார்கள். பா.ஜனதா சொல்லி தான் ரஜினிகாந்த் பேசுகிறார் என்று சிலர் கூறுகிறார்கள். ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து. ரஜினிக்கும், பா.ஜனதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கர்நாடகாவில் பா.ஜனதாவை ரஜினிகாந்த் எதிர்த்தார் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது கட்சியின் முன்னாள் மாவட்ட தலைவர், மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, ஒன்றியத்தலைவர் ரமேஷ், நகர தலைவர் ரஜினி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். முன்னதாக திருச்செங்கோட்டில் அரசியல் சட்ட நிர்ணய சபையின் குழு உறுப்பினராக இருந்த டி.என்.காளியண்ண கவுண்டரை எச்.ராஜா சந்தித்து பேசினார்.