சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டியில் உள்ள ஏரியில் மீன்கள் செத்து மிதப்பதற்கு ரசாயன ஆலைக் கழிவுகளே காரணம் எனக் கூறி, தண்ணீரில் இறங்கி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் நெய்க்காரப்பட்டியில் உள்ள கொட்டநத்தான் ஏரி, சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஏரியின் மூலம் விளைநிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. அண்மையில் பெய்த கனமழை காரணமாக கால்வாய்கள் வழியாக ஏரிக்கு நீர்வரத்தும் அதிகமாக இருந்தது.
ஆனால் இதைப் பயன்படுத்திக் கொண்டு சில சாயப்பட்டறைகள், கால்வாய்களில் ரசாயனக் கழிவுகளை கலந்து விடுவதாகவும், இதனால் மீன்கள் செத்து மிதப்பதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநகராட்சி ஆணையருக்கும் மனு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று ஏரியில் அதிக அளவிலான மீன்கள் செத்து மிதந்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து மாஸ்க் அணிந்தபடி ஏரி முன் திரண்ட பொதுமக்கள், ஏரியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஏரியை ஆய்வு செய்து மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். கழிவுகளை கலக்கும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.