மோதலில் ஈடுபட்ட பாஜகவினர் மீது வழக்குப் பதிவு இல்லை? அமீர் மீதும் பத்திரிகையாளர் மீதும் வழக்குப் பதிவா?கே.பாலகிருஷ்ணன்

Default Image

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ,தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் தகராறு செய்த பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்யாமல் நிகழ்ச்சியில் பேசிய அமீர் மீதும், பத்திரிகையாளர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது வருங்காலத்தில் பாஜகவை ஊக்கப்படுத்தும் செயலாகும் என கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று  இது குறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கை:“நேற்றைய  சட்டப்பேரவையில் கோவையில் நடைபெற்ற புதிய தலைமுறை தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற வட்டமேஜை விவாத நிகழ்ச்சி குறித்து தமிழக முதல்வர் அளித்த விளக்கம் ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.

வட்டமேஜை விவாத நிகழ்ச்சிக்கு உள் அரங்கத்தில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சிக்கு பலமுறை தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் அனுமதி கோரியும் அனுமதி மறுத்துள்ளது ஜனநாயக விரோத செயலாகும். மேலும் அத்தகைய நிகழ்ச்சிக்கு விளம்பரத் தட்டிகள் வைத்துக் கொள்வதற்கு கூட அனுமதி மறுத்திருப்பதை முதல்வர் நியாயப்படுத்துவது முறையற்றதாகும்.

தொலைக்கட்சி நிறுவனங்கள் சார்பிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் இதர அமைப்புகள் சார்பிலும் மக்கள் மத்தியில் எழும் பொதுப்பிரச்சினை தொடர்பாக பட்டிமன்றங்கள், விவாத நிகழ்ச்சிகள் நடைபெறுவது அவசியமான ஒன்றாகும் என்பதை முதல்வர் மறுக்க மாட்டார் என கருதுகிறோம்

இத்தயை நிகழ்ச்சிகள் மூலமாகத்தான் பல்வேறு பிரச்சினைகளின் மீது மக்களுக்கு சரியான புரிதலை ஏற்படுத்த முடியும் என்பதும் அறிந்ததே. இத்தகைய நிகழ்ச்சிகள் பதட்டத்தை ஏற்படுத்தும் என ஒரு கற்பனையான காரணத்தை வைத்துக் கொண்டு அனுமதி மறுப்பது மக்களின் விழிப்புணர்வுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையாகும்.

நிகழ்ச்சியின்போது நடைபெற்ற முழு விவரமும் காவல்துறையினர் அறிவார்கள்.

பல கட்சித் தலைவர்கள் மாறுபட்ட கருத்துகளைச் சொன்னபோதும் எந்தப் பிரச்சினையும் எழவில்லை. மாறாக, இயக்குநர் அமீர் பேசத் தொடங்கிய உடனேயே பாஜக கட்சியைச் சார்ந்தவர்கள் கோஷம் எழுப்பிக் கொண்டு அவரைப் பேசவிடாதே என மேடையை நோக்கி முண்டியடித்துக் கொண்டு வந்தனர்.

காவல்துறையினர் பெரும் சிரமப்பட்டுதான் அவர்களை தடுத்து நிறுத்த முடிந்தது. பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அமைதியை ஏற்படுத்த முயன்ற போதும், அவரது கட்சியினர் செவிமடுக்கவில்லை.இயக்குநர் அமீர் சொன்ன கருத்துகளை விட அவர் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர் என்பதால்தான் பாஜகவினர் அராஜகத்தில் ஈடுபட்டனர் என்பது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் தெரியும்.

உண்மை நிலைமை இவ்வாறிருக்க, பொது நிகழ்ச்சியில் கலவரத்தை விளைவித்த பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு மாறாக, இயக்குநர் அமீர் மீதும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தொலைக்காட்சி நிறுவனத்தினர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்திருப்பது முற்றிலும் ஜனநாயக விரோதமான செயலாகும்.

பத்திரிகையாளர்களை குறிப்பாக பெண் பத்திரிகையாளர்களை மிகக் கேவலமான முறையில் வலைதளத்தில் பதிவு வெளியிட்ட எஸ்.வி.சேகர் மீது சட்டப்படியான நடடிவடிக்கை எடுக்கத் தவறிய தமிழக அரசின் காவல்துறை ஒரு பொது விவாத நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தொலைக்காட்சி நிறுவனத்தின் மீதும், இயக்குநர் அமீர் மீதும் வழககுப் பதிவு செய்துள்ளது வன்மையான கண்டத்திற்குரியதாகும்

இத்தகைய செயல் தமிழகத்தில் பாஜக வினரை ஊக்கப்படுத்தி, மாற்றுக்கருத்துள்ள ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் அரசியல் கட்சிகள் மீது வன்முறை தாக்குதலுக்கு வழி வகுக்கும் என்பதையும் தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.

எனவே உடனடியாக தொலைக்காட்சி மற்றும் இயக்குநர் அமீர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டுமெனவும், பல கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட பொது நிகழ்ச்சியில் கலவரத்தை உண்டாக்க முயன்ற பாஜகவினுடைய நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.”இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்