மோடி அரசு இந்தியா முழுவதும் காவி நிறம் பூச முயற்சி…!தலைவராக பதவியேற்றவுடன் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு
திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தனது முதல் உரையை இன்று ஆரம்பித்தார்.
கடந்த 7 ஆம் தேதி தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி காலமானார்.பின்னர் ஆகஸ்ட் 8 ஆம் தேதி மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பின் திமுக தலைவர், பொருளாளர் பதவிகளுக்கு போட்டியிட விரும்புவோர் ஆகஸ்ட் 26ம் தேதி(அதாவது நேற்று முன்தினம் ) வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
அதேபோல் நேற்று முன்தினம் நடைபெற்ற வேட்பு மனு தாக்கலில் செயல் தலைவராக இருந்த மு.க ஸ்டாலின் போட்டியின்றி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு செல்வதற்கு முன் கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றார் மு.க.ஸ்டாலின்.
சென்னை கோபாலபுரம் இல்லத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திற்கு மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அண்ணா அறிவாலயம் செல்வதற்கு முன் தாய் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார் மு.க.ஸ்டாலின்.
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. பொதுக்குழு கூட்டத்தில் க.அன்பழகன், மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதன் பின் திமுக தலைவராக மு.க.ஸ்டாலினை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் பொதுச்செயலாளர் க.அன்பழகன்.இதனால் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.அதேபோல் திமுக பொருளாளராக துரைமுருகன் பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டார்.
மேலும் திமுக செயல் தலைவர் பதவிக்கான கட்சி விதி பிரிவு 4 நீக்கப்பட்டதாக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.
இதன் பின் திமுக தொண்டர்கள் அனைவரும் ஸ்டாலின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து இனிப்புகள் வழங்கியும்,பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி வருகின்றனர்.
இதன் பின்னர் திமுக தலைவராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் தனது முதல் உரையை இன்று ஆரம்பித்தார்.அவர் பேசுகையில்,திராவிட முன்னேற்றக் கழகத்தின் இதயமாம் பொதுக்குழுவில், கழகத்தின் தலைவராய் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன். தமிழர்களையும், தமிழினத்தையும் போற்றிப் பாதுகாத்த , தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் ஆகியோரின் வழியில் என்றைக்கும் பயணிப்பேன் என உறுதியேற்கிறேன்.மேலும் என் உயிரினும் மேலான தமிழினமே! என் கடைசி மூச்சு உள்ளவரை… என் கடைசி இதயத் துடிப்புவரை… உனக்காக உழைத்திடுவேன்! உனக்காக போராடுவேன்! இனம், மொழி, நாடு, கழகம் இந்த நான்கையும் எப்போதும் காப்பேன்.
அதேபோல் இந்தியா முழுவதும் காவி வண்ணம் அடிக்க நினைக்கும் மத்திய அரசுக்கு பாடம் புகட்ட வா,முதுகெலும்பில்லாத இந்த மாநில அரசை தூக்கி எரிய வா, அழகான எதிர்காலத்தை ஒன்றாக நாம் மெய்பிப்போம், இந்த அழைப்பு தென்றலை தீண்ட அல்ல. தீயைத் தாண்டுவதற்கு என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
DINASUVADU