மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை..!
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 46 அடியும், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 8 அடியும் உயர்ந்தது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேற்றும் இந்த அணைகளின் நீர்மட்டம் உயர்ந்தது.
அதாவது, நேற்று முன்தினம் 50.70 அடியாக இருந்த பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை 61.15 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் 11 அடி உயர்ந்துள்ளது. இதுபோல் 65.29 அடியாக இருந்த சேர்வலாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 26 அடி உயர்ந்து 91.53 அடியாக இருந்தது. 76 அடியாக இருந்த மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் நேற்று 81.10 அடியாக உயர்ந்தது.
ஏர்வாடி அருகே திருக்குறுங்குடியில் உள்ள கொடுமுடியாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 32 அடியாக இருந்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் கொடுமுடியாறு அணை நேற்று நிரம்பியது. அணையின் முழு கொள்ளளவான 52.50 அடி நீர்மட்டத்தை எட்டியது.
இந்த அணை ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் நிரம்பியது. தற்போது 6 மாத இடைவெளியில் மீண்டும் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு ஜூன் மாதத்தில் கொடிமுடியாறு அணை தற்போது முழு கொள்ளளவை எட்டியதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
இந்த அணையின் மூலம் 44 குளங்களுக்கு தண்ணீர் செல்கிறது. ஏராளமான கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. அணை நிரம்பி உள்ளதால், அணைக்கு வரும் 1,000 கன அடி தண்ணீரும் அப்படியே கால்வாய்களில் திறந்து விடப்படுகின்றன. வள்ளியூரான் கால்வாயில் 900 கன அடி தண்ணீரும், படலையார்குளம் கால்வாய் மற்றும் ஆற்றுப்பாசனத்துக்கு 100 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படுகிறது.
மேலும் கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நேற்று வினாடிக்கு 20 கன அடியாக குறைக்கப்பட்டது. சேர்வலாறு அணை முழுமையாக மூடப்பட்டது.
பாபநாசம் கீழ் அணையில் இருந்து நேற்று முன்தினம் ஒருங்கிணைந்த அளவாக வினாடிக்கு 900 கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் நேற்று 77 கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேறியது. மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் காட்டாற்று வெள்ளம் தாமிரபரணி ஆற்றில் கலந்து தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லிமீட்டரில் வருமாறு:-
பாபநாசம்- 118, கொடுமுடியாறு- 100, சேர்வலாறு -46, கருப்பாநதி- 75, குண்டாறு- 49, கடனாநதி- 18, ராமநதி- 12, அடவிநயினார்- 30, மணிமுத்தாறு- 6.40, செங்கோட்டை- 38, ராதாபுரம்- 13, தென்காசி- 20.