மூன்றாவது நாளாக ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை!
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மூன்றாவது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி ஆற்றில் நீர்வரத்து படிபடியாக குறைந்துவருகிறது.
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால், கபினி அணை வேகமாக நிரம்பியதை அடுத்து, காவிரி ஆற்றில் உபரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட்டது. தொடக்கத்தில் வினாடிக்கு 35 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், கபினி அணைக்கு வரத்து குறைந்ததால், காவிரி ஆற்றில் நீர் திறப்பும் குறைக்கப்பட்டது. இதனிடையே, ஒகேனக்கல் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் நேற்று முன் தினம் தடை விதிக்கப்பட்டது.
ஒகேனக்கல் அருவியில் நேற்று மாலை வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி நீர் வந்த நிலையில், இன்று காலையில் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது. இருப்பினும், ஒகேனக்கல் அருவியில் காவிரிநீர் ஆர்ப்பரித்துக் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் விதிக்கப்பட்ட தடை இன்று மூன்றாவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.