முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினரை கொலை செய்ததாக 3 பேர் கைது!
கோவையைச் சேர்ந்த 3 பேரை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினரை கடத்தி கொலை செய்ததாக, போலீசார் கைது செய்துள்ளனர்.
சிவமூர்த்தி என்பவர், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் உறவினரான இவர், திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். அவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காருடன் மாயமாகி விட்டதாகவும், அவரை செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, விசாரணையில் இறங்கிய போலீசார், சிவமூர்த்தியின் காரில் ஜி.பி.எஸ். கருவி இருந்ததால், அதன்மூலம் கார் செல்லும் வழியை கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர்.
அப்போது,நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு ஆம்பூர் அருகே கார் சென்று கொண்டிருப்பதை அறிந்த அவர்கள், தகவல் கொடுத்துள்ளனர். ரோந்து போலீசாரும், ஜமீன் பகுதியில் சென்று கொண்டிருந்த காரை மடக்கி, அதிலிலிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தபோதுதான், சிவமூர்த்தி கொலை செய்யப்பட்ட தகவல் தெரியவந்துள்ளது.
திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வந்த சிவமூர்த்திக்கும், அங்கு பணிபுரியும் ஒரு பெண்ணுக்கும் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த அந்த பெண்ணின் கணவர் மூர்த்தி, கூலிப்படையைச் சேந்த விமல், மணிபாரதி, கவுதமன் ஆகியோரை அணுகியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கோவையைச் சேந்த அந்த கூலிப்படை கும்பல், தொழிலதிபர் சிவமூர்த்தியை காருடன் கடத்திச் சென்றதாக, போலீசார் தெரிவிக்கின்றனர்.
காருடன் கடத்திச் சென்று சிவமூர்த்தியை கொலை செய்த அந்த கும்பல், ஒருநாள் முழுவதும் சடலத்தை காரிலேயே வைத்துக் கொண்டு சுற்றியதாகவும், உடலில் இருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியதால், ஓசூர் ஏரியில் சடலத்தை வீசியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், அந்த கும்பல் சென்னை நோக்கிச் சென்றபோதுதான் போலீசாரிடம் சிக்கியது. 3 பேரையும் கைது செய்த போலீசார், திருப்பூர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியபின், தொழிலதிபர் சிவமூர்த்தியின் சடலம் வீசப்பட்டதாக கூறப்படும் ஓசூர் ஏரிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனிடையே, கூலிப்படையை ஏவி தொழிலதிபரை கொலை செய்ததாக கூறப்படும் மூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர்.