முதல்வரை சந்தித்த பின்னரும் போராட்டம் தொடரும்?
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் ‘தமிழக திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் தொடரும்’ என முதல்வர் பழனிச்சாமியை சந்தித்த பின்னர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் 8 சதவீத கேளிக்கை வரியை முற்றிலுமாக ரத்துசெய்ய வேண்டும், வருடத்துக்கு ஒருமுறை புதுப்பிக்கும் தியேட்டர் லைசென்ஸை 3 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து இன்று மனு அளித்தனர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு உடன் இருந்தார்.
சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், ”இன்னும் இரண்டு நாட்களில் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தன்னுடைய கருத்தைத் தெரிவிப்பதாக முதல்வர் உறுதி அளித்துள்ளார். பேரவைக் கூட்டம் நடைபெற்று வருவதால் இரண்டு நாட்கள் காத்திருக்குமாறு முதல்வர் கூறியுள்ளார். எனவே, சுமுகத் தீர்வு ஏற்படும் வரை போராட்டம் தொடரும்” என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.