முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.87.88 கோடி நன்கொடை -தமிழக அரசு….!!
கஜா புயலுக்கு பொதுமக்கள் நேரடியாகவும், ஆன்-லைன் மூலமாகவும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 87 கோடியே 88 லட்சத்து 62 ஆயிரத்தி 791 ரூபாய் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் வரலாறு காணாத வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வாழ்வாதாரங்களை இழந்த மக்களுக்கு உதவிடவும், நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 19-ம் தேதி பத்திரிகைகள் வாயிலாக நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இந்நிலையில், பல்வேறு நிறுவனங்கள் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள் நேரிடையாகவும், ஆன்லைன் மூலமாகவும் நன்கொடைகள் வழங்கியுள்ளதாகவும், இவ்வாறு இதுவரை 87 கோடியே 88 லட்சத்து 62 ஆயிரத்தி 791 ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசின் செய்தி வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது.