முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? துரைமுருகன் சவால்

Default Image

தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன்,காவிரி பிரச்சனையில் சாதித்தது தி.மு.க.வா?, அ.தி.மு.க.வா? என்பது குறித்து என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க எடப்பாடி பழனிசாமி தயாரா? என்று  சவால் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் ,
காவிரி பிரச்சனையில் தமிழகத்திற்கு தி.மு.க. துரோகம் செய்து விட்டது என்று திரும்பத் திரும்ப சொன்னால் மக்கள் நம்பி விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டு எடப்பாடி பழனிசாமி நாகப்பட்டினத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றியிருப்பது அவர் வகிக்கும் முதலமைச்சர் பதவிக்கு துளியும் அழகல்ல என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

காவிரி பிரச்சனையில் முதல் பேச்சுவார்த்தையை துவக்கியது, நடுவர் மன்றத்திற்கு முதலில் கோரிக்கை வைத்தது, சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது, நடுவர் மன்றம் அமைத்தது, இடைக்காலத்தீர்ப்பு பெற நடுவர் மன்றத்திற்கு உச்சநீதிமன்றத்தில் அதிகாரம் பெற்றது, இடைக்காலத் தீர்ப்பினை அரசிதழில் வெளியிட்டு அதன்படி காவிரி நதி நீர் ஆணையம் அமைத்தது, அ.தி.மு.க. அரசு முடக்கி வைத்திருந்த காவிரி வழக்கு இறுதி விசாரணையை முடித்து இறுதி தீர்ப்பு பெற்றது அனைத்துமே கருணாநிதி முதலமைச்சராக இருந்து செய்த சாதனைகள் என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

காவிரி வரைவு திட்டம் உச்சநீதிமன்றத்தால் இறுதி செய்யப்பட்டு, ஜூன் 1-ந் தேதிக்குள் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றமே உத்தரவிட்டும், இன்று வரை அமைக்காமல் நாகப்பட்டினத்தில் நின்று கொண்டு நான் தான் காவிரிப்பிரச்சனையில் சாதித்து விட்டேன் என்று நர்த்தனம் ஆடுவதற்கு முதலமைச்சருக்கு கொஞ்சமாவது தயக்கம் வேண்டாமா?. ஆணையமே அமைக்காமல் காவிரி பிரச்சனையில் சாதித்து விட்டோம் என்று முதலமைச்சர் போய் பேசுகிறார் என்றால் அய்யகோ, தமிழ்நாட்டிற்கு இப்படியொரு சோதனையா என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

இறுதியில் ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தாலும் அ.தி.மு.க. அரசை அசைக்க முடியாது திருவாய் மலர்ந்திருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஒரு ஸ்டாலினை சட்டமன்றத்தில் பேச விடுவதற்கே அஞ்சி நடுங்கி நிற்கும் நீங்கள் ஆயிரம் ஸ்டாலின்கள் வந்தால் வங்காள விரிகுடா கடலில் தான் அ.தி.மு.க. அரசு கிடக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அ.தி.மு.க. அரசை அசைத்துப் பார்க்க ஆயிரம் ஸ்டாலின்கள் தேவையில்லை. மு.க.ஸ்டாலின் கண் அசைத்தால் ஒவ்வொரு தி.மு.க. தொண்டனும் களத்தில் இறங்கினால் ஒரு பழனிசாமி அல்ல ஓராயிரம் பழனிசாமிகள் வந்தாலும் தாக்குப்பிடிக்க முடியாது என்று எச்சரிக்க விரும்புகிறேன். ஏதோ விபத்தில் முதலமைச்சராகி விட்ட பழனிசாமி வீராப்பு பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்ல காவிரி பிரச்சினையில் சாதித்தது தி.மு.க.வா? அல்லது அ.தி.மு.க.வா? என்று விவாதம் நடத்த விரும்பினால் நான் அதற்கு ரெடியாக இருக்கிறேன். ஒரே மேடையில் காவிரி பற்றி விவாதிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தயாரா?.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்