மீண்டும் திறக்கப்படுகிறது ஸ்டெர்லைட் ..அரசாணையை எதிர்த்து மனுதாக்கல் செய்ய முடிவு..!
தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என வலியுறுத்தி கடந்த 22ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் 13பேர் உயிரிழந்தனர். பலர் காயமுற்றனர். தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், இது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இசைவாணை மறுத்து பிறப்பிக்கபட்ட உத்தரவை எதிர்த்து அந்நிறுவனம் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு வழக்கு ஜூலை 10-க்கு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த மே மாதம் 28ம் தேதி அன்று தமிழக அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏப்ரல் 9ஆம் தேதி வழங்கிய ஆணையை ஆதரித்து ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிட்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வின் ஆணையை எதிர்த்த வழக்கின் மீது விசாரணை நடத்துவது சரியாக இருக்காது என மேல் முறையீட்டு ஆணையம் கூறியுள்ளது.
தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தால் தான், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இதனால் அரசாணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் உயர்நீதிமன்றம் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை கருத்தில் கொண்டு அமைதி காத்து வரும் ஸ்டெர்லைட் நிர்வாகம், விரைவில் நீதிமன்றத்தை நாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று 2013ம் ஆண்டு தமிழக அரசாணையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடி ஆலையை மீண்டும் ஸ்டெர்லைட் நிர்வாகம் திறந்தது குறிப்பிடத்தக்கது.
ஆலை மீண்டும் திறக்கப்படுமா?
தூத்துக்குடியில் ஓரிரு மாதங்களில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும். அதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என டெல்லியில் ஸ்டெர்லைட் தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். மேலும், அவர் தூத்துக்குடியில் அமைதி திரும்ப காத்திருக்கிறோம். தூத்துக்குடி கலவரத்திற்கு சமூக விரோதிகளும், தொண்டு நிறுவனங்களும்தான் காரணம் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.