மீண்டும் சிக்கலில் ‘ஜெய் பீம்’ – வன்னியர் சங்கம் சார்பில் வழக்கு!
கடலூர்:ஜெய் பீம் படத்தின் நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது சிதம்பரம் நீதிமன்றத்தில் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி வழக்கு தொடர்ந்துள்ளார்.
நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரிப்பில் இயக்குனர் ஞானவேல் இயக்கி நடிகர் சூர்யா நடித்த ‘ஜெய் பீம்’ திரைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஒடிடியில் வெளியானது.இப்படம் மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடம் வரவேற்பை பெற்றாலும்,படத்தில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குருவின் பெயரை குற்றவாளி கதாபாத்திரத்துக்கு வைத்துள்ளதாகவும்,குற்றவாளி கதாபாத்திரத்தின் பின்பக்கத்தில் வன்னியர்களின் அடையாளமான அக்னி குண்டத்தை காட்டியதாகவும் சர்ச்சை எழுந்தது.இதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்திருந்தார்.இதனையடுத்து,சர்ச்சைக்குரிய அந்த படம் மாற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,ஜெய் பீம் படத்திற்கு மீண்டும் சிக்கல் உருவாகியது. வன்னியர் சமுதாயத்தை தவறாக சித்தரித்ததற்காக அப்படத்தின் நடிகர் சூர்யா, தயாரிப்பாளர் ஜோதிகா மற்றும், இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோரிடம் ரூ.5 கோடி இழப்பீடு கேட்டு வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
இதனையடுத்து,குறிப்பிட்ட சமூகத்தின் குறிபிட்டு வேண்டும் என்பது எங்கள் யாருடைய நோக்கமும் அல்ல என்று இயக்குனர் ஞானவேல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,ஜெய் பீம் படத்தின் நடிகர் சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது சிதம்பரம் நீதிமன்றத்தில் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவதூறு பரப்புதல்,இரு சமூகத்தினரிடையே வன்முறையை தூண்டுதல்,பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின்கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.