மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த மின்வாரிய ஊழியர்கள் -அமைச்சர் தங்கமணி நேரில் சந்தித்து ஆறுதல்..!!
மின்சாரம் தாக்கி படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் மின்வாரிய ஊழியர்களை, அமைச்சர் தங்கமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்
கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் சேதமடைந்த மின்கம்பங்கள், மின் ஒயர்கள் மற்றும் மின்மாற்றிகள் போன்றவை போர்க்கால அடிப்படையில் பழுது பார்க்கப்பட்டு வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த களமாவூரில் மின்வாரிய ஊழியர்கள் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, முருகேசன், மோகன் ஆகியோர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக திருச்சி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனிடையே, கஜா புயல் மீட்பு பணிக்காக நாகை மாவட்டத்தில் முகாமிட்டிருந்த அமைச்சர் தங்கமணி, தகவலறிந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்தார். அங்கு சிகிச்சை பெற்றுவரும், மின்வாரிய ஊழியர்கள் இருவரையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
dinasuvadu.com