மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…!!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் ஜனவரி 23-25 தேதிகளில் சென்னையில் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், உ. வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முதல் நாளான இன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
1. பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெறுக
சிபிஐ(எம்) மாநிலக்குழு வலியுறுத்தல்
தமிழக அரசு 55 சதவிகிதத்திலிருந்து 100 சதவிகிதம் வரை பேருந்து கட்டணத்தை உயர்த்தி ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீது மிகப்பெரிய தாக்குதலைத் தொடுத்திருக்கிறது. இது மக்களின் தலையில் விழுந்த பேரிடியாகும். அனைத்துப்பகுதி மக்களையும் கடுமையாக பாதிக்கிற இந்த கட்டண உயர்வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
தமிழகத்தில் அன்றாடம் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பேருந்து போக்குவரத்தை பயன்படுத்துகிறார்கள். மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்வதற்கும், கிராமப்புற நகர்ப்புற ஏழை-எளிய உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பத்து பிள்ளைகள் கல்வி கற்பதற்கும், தமிழகத்தின் பொருளாதார மேம்பாட்டிற்கும், ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பிற்கும், தனிநபர் சராசரி வருமானத்திற்கும், கல்வி, சுகாதாரம் போன்ற மனிதவள குறியீடுகளுக்கும் அளப்பரிய பங்கினை ஆற்றி வருகின்றன இந்த போக்குவரத்து கழகங்கள். இந்த சமூக நல நோக்கினைப் பின்னுக்குத் தள்ளி, வணிக நோக்கத்தோடு போக்குவரத்துக் கட்டணத்தை உயர்த்துவது தமிழக மக்களின் நலன்களுக்கும், வளர்ச்சிக்கும் எதிரானதாகும்.
தமிழக அரசின் ஆண்டு பட்ஜெட்டில் போக்குவரத்துத்துறைக்கு ஏற்படும் பற்றாக்குறை 1.5 சதவிகிதம் மட்டுமே. போக்குவரத்துத்துறையில் உள்ள நிர்வாகச் சீர்கேடு மற்றும் முறைகேடுகளை சரி செய்வது, பழுதடைந்த பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளைப் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் இந்தப் பற்றாக்குறையை சரிசெய்திட முடியும். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சலுகை கட்டணம் மற்றும் 30 லட்சம் மாணவர்களுக்கு இலவச பயண வசதி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கான மானியத் தொகையை அரசு முறையாக வழங்கினாலே போக்குவரத்துத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்த முடியும். கடந்த 25 ஆண்டுகளில் இதனை அரசு ஈடுகட்டியிருந்தால், இந்த நெருக்கடி நிலையைத் தவிர்த்திருக்கலாம். மாறாக, பழியை தொழிலாளர்கள் மீது சுமத்தி கட்டண உயர்வை நியாயப்படுத்துவது நேர்மையற்ற செயல்.
மேலும் எதிர்காலத்தில் எரிபொருள், மசகு எண்ணெய் மற்றும் பராமரிப்புச் செலவு உள்ளிட்டவற்றில் ஏற்படும் கூடுதல் செலவினக் குறியீடுகளின் அடிப்படையில் அவ்வப்போது கட்டணம் அதிகாரிகளால் உயர்த்தப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்திருப்பது மிகப்பெரும் துரோகம். இதை அனுமதிக்கக் கூடாது.
இக்கட்டண உயர்வால், சாதாரண ஏழை எளிய மக்கள், தினக்கூலி தொழிலாளர்கள், கிராமத்திலிருந்து காய்கறி, பூ, பழம், கீரை வகைகளை நகரங்களுக்கு கொண்டு வந்து விற்பனை செய்துவிட்டு போகும் சாதாரண மக்கள் தங்களது மாத வருமானத்தில் 30 சதவீதத்தை போக்குவரத்துக்காக மட்டுமே செலவிட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. இதர அத்தியாவசிய செலவுகளை ஈடுகட்ட முடியாமல் தத்தளிக்கும் சூழலை இது ஏற்படுத்தும். இதையொட்டி தனியார் பேருந்துகளும் கட்டண உயர்வை மேற்கொண்டிருப்பதை ஏற்க முடியாது.
இந்த பேருந்து கட்டண உயர்வை திரும்பப்பெறக்கோரி, மாநிலம் முழுவதும் நேற்றைக்கு 500க்கும் மேற்பட்ட இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடந்துள்ளன. பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராடி வருகின்றனர். மாநிலம் முழுவதும் மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து வீதிகளில் இறங்கியுள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளும் கட்டண உயர்வைத் திரும்பப்பெற வலியுறுத்தி போராட்டங்களை அறிவித்துள்ளன.
எனவே, தமிழக அரசு அறிவித்துள்ள அதிரடி கட்டண உயர்வை, போராடும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனடியாகத் திரும்பப் பெறவும், அவ்வப்போது கட்டணத்தை உயர்த்த அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தைக் கைவிடவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
2. கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி ஜனவரி 28ல் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்கிறது
காவிரி டெல்டா மாவட்டங்களில் கருகும் பயிரைக் காப்பாற்ற கர்நாடக மாநிலத்திலிருந்து தண்ணீர் பெற்றுத் தர மத்திய அரசை வலியுறுத்தி 2018 ஜனவரி 28-ந் தேதி நடைபெறவுள்ள ரயில் மறியல் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தனது முழு ஆதரவினை தெரிவித்துக் கொள்வதுடன் மறியலிலும் பங்கேற்கிறது.
காவிரி டெல்டா பகுதிகளில் பாசனத்திற்காக 2017ம் ஆண்டு அக்டோபர் 2ந் தேதி தான் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் சாகுபடி பணிகள் தாமதமாக துவங்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டனர். கடை மடை பகுதிகளுக்கு தண்ணீர் போய்ச் சேராததால் பல லட்சம் ஏக்கர்கள் பயிரிட முடியாமல் தரிசாகப் போடப்பட்டுள்ளது. சுமார் 13 லட்சம் ஏக்கர் சம்பா, தாளடி பயிரிடப்பட்டுள்ளது. இதில் சுமார் 60 சதவிகிதம் இப்போதுதான் பால் பிடிக்க துவங்கியுள்ளது.
இந்த நிலையில் இன்னும் இரண்டு அல்லது மூன்று தண்ணீர் பாய்ச்சினால் தான் முழு மகசூல் எடுக்க முடியும். இல்லையென்றால் மொத்தமும் பதராக போய் விடக்கூடிய ஆபத்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். எனவே, இந்திய பிரதமர் அவர்களை தமிழக முதலமைச்சர் நேரிடையாகச் சந்தித்து காவிரி பாசனத்திற்கு தேவையான தண்ணீர் பெற முயற்சி எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க உடனடியாக கர்நாடக மாநில அரசிடமிருந்து தமிழக அரசு கோரியுள்ள 15 டி.எம்.சி. தண்ணீரை பெற்றுத்தர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கோருகிறது.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஜனவரி 28ந் தேதி நடைபெறவுள்ள விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்று மறியல் போராட்டத்தை வெற்றியடையச் செய்வதென்று மாநிலக்குழு தீர்மானிக்கிறது.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், மத்திய அரசின் பாராமுகத்தைக் கண்டித்தும் நடைபெறும் இந்த ரயில் மறியல் போராட்டத்திற்கு அனைத்து தரப்பு மக்களும், ஜனநாயக அமைப்புகளும் ஆதரவளிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது.
– ஜி. ராமகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்