மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் கைதான 6 பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது..!
திருவள்ளூரை சேர்ந்த மாணவியிடம் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 20), தலகாஞ்சேரியை சேர்ந்த நவீன்குமார் (19) ஆகியோர் காதலிப்பது போல நடித்து உள்ளனர். அப்போது அந்த மாணவியை கஞ்சா, மது பழக்கத்துக்கு அடிமையாக்கி பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இது பற்றி தலகாஞ்சேரியை சேர்ந்த தங்கள் நண்பர்கள் கார்த்திக் (19), அருண் (20), கமல் என்ற ராஜ்கமல் (23), திருவள்ளூரை சேர்ந்த மகேஷ் (20) ஆகியோரிடம் ராஜேஷ் தெரிவித்து உள்ளார். அவர்களும் அந்த மாணவிக்கு மது, கஞ்சா கொடுத்து பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தனர்.
இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் திருவள்ளூர் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சிபிச்சக்கரவர்த்தி உத்தரவின் பேரில் திருவள்ளூர் டவுன் போலீசார் மற்றும் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மாணவியிடம் விசாரித்த போது, தன்னை 21 பேர் வெவ்வேறு இடங்களில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக வாக்குமூலம் அளித்து இருந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், அனைவர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் ராஜேஷ், நவீன்குமார், கார்த்திக், அருண், கமல் என்ற ராஜ்கமல், மகேஷ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்களை திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.
தலைமறைவாக உள்ள மேலும் 15 பேரை பிடிக்க துணை சூப்பிரண்டு புகழேந்தி, இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்