மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம்:தொடர்ந்து 3வது நாளாக பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை !
தொடர்ந்து 3வது நாளாக,அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியிடம் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவிகளை, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்காக, தவறான பாதைக்கு அழைத்த வழக்கில், பேராசிரியை நிர்மலா தேவி 5 நாட்கள் சிபிசிஐடி காவலில் எடுக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். விருதுநகரில் உள்ள அலுவலகத்தில் வைத்து சிபிசிஐடி எஸ்.பி. ராஜேஸ்வரி தலைமையில், 3 டி.எஸ்.பி.க்கள் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
மூன்றாவது நாளாக இன்றும் தொடரும் விசாரணையில், வேறு ஏதேனும் மாணவிகளிடம் நிர்மலா தேவி தவறான வகையில் பேசியுள்ளாரா? என்பது தொடர்பாக விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் நேற்று அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டி காவியன்நகரில் உள்ள நிர்மலா தேவியின் வீட்டில் 2 குழுவினர் சோதனை நடத்தி கைப்பற்றிய முக்கிய ஆவணங்கள், சி.டி.க்கள், புகைப்படங்கள், பென் டிரைவ்கள் ஆகியவை தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தேவைப்பட்டால் நிர்மலா தேவியை வெளியூர் அழைத்துச் சென்று விசாரிக்கவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.