மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரம்:பேராசிரியை நிர்மலா வீட்டில் தீவிர சோதனை!
பேராசிரியை நிர்மலா தேவியிடம் , மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தி வரும் நிலையில் அவரது வீட்டில் சோதனையும் நடைபெற்று வருகிறது.
நிர்மலாதேவியை 5 நாள் சி.பி.சி.ஐ.டி. காவலில் விசாரிக்க சாத்தூர் நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து விருதுநகர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் நிர்மலா தேவியிடம் 2-வது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணையில், முனைவர் படிப்பு படித்து வந்த கருப்பசாமி, பல்கலைக்கழக அதிகாரி முருகன் ஆகியோர் உடந்தையாக இருந்ததாக நிர்மலா தேவி தெரிவித்ததாகக் கூறப்படும் நிலையில் அவர்களை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
உயிருக்கு பாதுகாப்பு இல்லை என நிர்மலா தரப்பில் கூறப்பட்டதையடுத்து விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அருப்புக்கோட்டையில் உள்ள நிர்மலாதேவியின் வீட்டில் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் 8 பேர் சோதனை மேற்கொண்டனர். அருப்புக்கோட்டை கல்லூரியிலும் பெண் ஆய்வாளர்கள் உட்பட 4 பேர் விசாரணை நடத்தினர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பதிவாளர் அறையில் சோதனை நடத்திய சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள், பதிவாளர் சின்னையாவிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய விசாரணை அதிகாரி சந்தானம், நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்துவது குறித்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்நிலையில் மாலையில் காமராஜர் பல்கலைக்கழகத்தில் விசாரணை மேற்கொண்ட சந்தானம் குழு முன் பேராசிரியர்கள் ஜெயச்சந்திரன், சண்முகராஜன், பாரி பரமேஸ்வரன், கூடுதல் தேர்வாணையர் ராஜராஜன்
உதவி கூடுதல் தேர்வாணையர்கள் மலைச்சாமி, நாகசுந்தரம் உள்ளிட்டோர் விளக்கம் அளித்தனர். பிப்ரவரி 13, 14, 15 தேதிக்களில் விடைத்தாள் திருத்தம் தொடர்பாக பேராசிரியை நிர்மலா தேவி பல்கலைக்கழகத்துக்கு வந்து இவர்களை சந்தித்ததாகவும், அது குறித்து சந்தானம் குழு விசாரணை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.