மருத்துவப் படிப்பில் சேரும் இந்திய மாணவர்களுக்கு சிறப்பு உதவித் தொகை ரஷ்ய அரசு பல்கலைக்கழகங்கள் அறிவிப்பு..!
சென்னையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் ஜூன் 9 மற்றும் 10 ஆகிய தேதி
களில் ரஷ்ய கல்விக் கண்காட்சி நடைபெறவுள்ளது.
இதில் மருத்துவம், பொறியியல் கல்வியைக் கற்பிக்கும் பத்துக்கும் மேற்பட்ட முன்னணி ரஷ்ய அரசு கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த இலவசக் கண்காட்சி, இரண்டு நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர விரும்புவோர் அதற்கு தகுதியான சான்றுகளுடன் வருகை தந்தால் அம்மாணவர்களுக்கு உடனடி சேர்க்கை வழங்கப்படும்.சென்னையில் 20-வது முறையாக நடைபெறும் இந்தக் கண்காட்சியை, ரஷ்ய அறிவியல் கலாச்சார மையம் மற்றும் ரஷ்ய கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கான – இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான ஸ்டடி அப்ராட் ஆகியவை இணைந்து நடத்துகின்றன. சென்னையைத் தொடர்ந்து இத்தகைய கண்காட்சிகள், ஜூன் 11 அன்று சேலம் (ஓட்டல் ஜி.ஆர்.டி. கிராண்ட் எஸ்டான்சியா), ஜூன் 12-ம் தேதி – திருச்சி (ஓட்டல் ரம்யாஸ்), ஜூன் 13-ம் தேதி – ஹைதராபாத் (ஓட்டல் மேரி கோல்ட், அமீர்பேட்) ஆகிய நகரங்களிலும் நடைபெறவுள்ளது.
ரஷ்யாவில் உள்ள பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு சி.இ.டி., ஐ.இ.எல்.டி.எஸ் போன்ற முன்தகுதித் தேர்வுகள் எதையும் மாணவர்கள் எழுதத் தேவையில்லை. ஆனால் இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிப்படி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் மருத்துவம் படிக்க விரும்புவோர் நீட் தேர்வில் தேறியிருத்தல் வேண்டும். ஆனால் வெளிநாடுகளில் 2018-ஆம் ஆண்டுக்கு முன்னர் மருத்துவப் படிப்பில் சேர்ந்து தற்போது அதற்கான முன் தயாரிப்பு படிப்புகளில் உள்ளவர்களுக்கு மருத்துவ கவுன்சில் இவ்வாண்டு விதி விலக்கு அளித்துள்ளது. ரஷ்யாவில் மருத்துவப்படிப்பிற்கு ஆண்டு கல்விக்கட்டணமாக ரூ.2.25லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விடுதிக்கட்டணம் உணவுடன் ரூ.7ஆயிரம் முதல் ரூ.8ஆயிரம் வரை செலவாகும் என்று தென்னிந்திய ரஷ்ய கூட்டமைப்பு தூதரகத்தின் கலாச்சாரத் துணைத் தூதர் மிகைல் ஜே. கோர்பட்டோவ் கூறினார். மருத்துவப்படிப்பில் சேரும் இந்திய மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.
செய்தியாளர்கள் சந்திப்பின் போது தென்னிந்திய ரஷ்ய கூட்டமைப்பு தூதரகத்தின் துணைத் தூதர் யூரி எஸ். பிலொவ், ஸ்டடி அப்ராட் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ரவிச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். படிப்புகள் மற்றும் கண்காட்சி குறித்த கூடுதல் விவரங்களுக்கு 92822 21221 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.