மத்திய அரசு புதிய திட்டம்! ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு முறையில் மாற்றம்!
குடிமைப் பணிகள் தேர்வுக்கான பயிற்சியாளர்கள்,ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரும் மத்திய அரசின் திட்டம், பணம் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் மட்டுமே ஐ.ஏ.எஸ்., ஆக முடியும் என்ற சூழலை உருவாக்கிவிடும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.
பிரதமர் அலுவலகம் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு முடிந்த பின்னர் அளிக்கப்படும் 100 நாள் பயிற்சியில், மதிப்பெண்கள் வழங்கப்பட்டு, அதன் பின்னர் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்களுக்கு பணியிடங்கள் ஒதுக்கலாம் என விரும்புவதாகக் கூறியுள்ளது. இதற்கு 7 நாட்களுக்குள் கருத்துக்களையும், தகவல்களையும் வழங்குமாறு கடந்த 17-ஆம் தேதியிட்ட சுற்றறிக்கையில் கோரப்பட்டுள்ளது.
இதுகுறித்து தனியார் ஐ ஏ எஸ் பயிற்சி அகாடமியைச் சேர்ந்த சங்கர், கருத்து தெரிவித்துள்ளார். அதில், உத்தரகாண்ட் மாநிலம் முசோரியில் நடத்தப்படும் 100 நாள் பயிற்சி முகாமில் அங்குள்ள அதிகாரிகளே இறுதி மதிப்பெண் வழங்கும் அதிகாரம் பெற்றவர்களாக உருவெடுப்பர் என சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, தங்கள் மாநிலத்தவர்களுக்கோ, பணம் அல்லது அரசியல்வாதிகளின் தொடர்பு உள்ளவருக்கோ, தங்களுக்கு வேண்டியவர்களுக்கே முக்கியத்துவம் அளித்து அதிக மதிப்பெண் வழங்க வாய்ப்பு உருவாகிவிடும் எனக் கூறியுள்ளார்.
உதாரணமாக எழுத்து தேர்வில் சுமார் 1200 மதிப்பெண் பெற்று முதல் இடத்தில் உள்ள ஒருவரை 100நாள் பயிற்சி முகாமில் குறைந்த மதிப்பெண் வழங்கி அவரை கடைசி இடத்திற்கும், எழுத்து தேர்வில் 900 மதிப்பெண் பெற்று கடைசி இடத்தில் உள்ளவரை பயிற்சி முகாமில் அதிக மதிப்பெண்கள் வழங்கி அவரை முதல் இடத்திற்கும் கொண்டுவர அதிகாரிகளால் முடியும் என சங்கர் போன்ற கல்வியாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
நாட்டிலேயே ஓரளவு நேர்மையாக நடத்தப்படும் தேர்வாக யூபிஎஸ்சி தேர்வுகள் பார்க்கப்படுவம் நிலையில், திறமைக்கு மதிப்பு அளிக்காமல் பணம் மற்றும் அரசியல் செல்வாக்கு உடையவர்களுக்கு உதவும் வகையில் தேர்வு முறை அமைந்து விடாமல், உரிய கருத்தை மாநில அரசுகள் பொறுப்புடன் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.