மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்குத் தேவையான சாலைகளை அதிகளவில் பெற்றுத் தந்தது அதிமுகவா? திமுகவா?
சட்டப்பேரவையில் இரு கட்சியினரிடையே தமிழகத்திற்குத் தேவையான சாலைகளை மத்திய அரசிடம் இருந்து அதிகளவில் பெற்றுத் தந்தது அதிமுகவா? திமுகவா? என காரசார விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை விவாதத்தின் போது பேசிய திமுக உறுப்பினர் ஐ.பெரியசாமி, சுதந்திர இந்தியாவில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்தியவர் சி.சுப்பிரமணியம் என்றால், தமிழகத்தில் முதலமைச்சராக இருந்தபோது சாலைப் புரட்சியை ஏற்படுத்தியவர் கருணாநிதி எனப் பேசினார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மத்திய ஆட்சியில் தமிழக அரசுக்கு அதிகாரமில்லை, கூட்டணி இல்லை என்ற போதிலும், பல்வேறு சாலைப் பணிகளை பெற்று செயல்படுத்திவருவதாக விளக்கமளித்தார். இந்த விவாதத்தில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தங்க நாற்கர சாலைத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெற்றுத்தந்தார் எனத் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், பல்வேறு திட்டங்களை பெற்றபோதும் மத்திய பாஜக அரசுக்கு கொடுத்த ஆதரவை அதிமுக ஏன் திரும்பப் பெற்றது என கேள்வி எழுப்பினார். துரைமுருகனுக்கு பதிலளித்த ஜெயக்குமார், காவிரியில் 205 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாததால், பொதுநலனை கருத்தில் கொண்டு ஆதரவை விலக்கிக்கொண்டோம் எனக் கூறினார்.
மேலும், மத்திய அரசுடன் திமுக கூட்டணியில் இருந்தபோது எலுமிச்சை அளவு திட்டங்களும், தற்போது அதிமுக ஆட்சியில் பூசணிக்காய் அளவு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுவருவதாகவும் அதனை மறைக்க முடியாது என்றும் ஜெயக்குமார் கூறினார். சாலைத் திட்டங்களை யார் அதிகம் கொண்டுவந்தது என்பதை ஆராய விசாரணை ஆணையம் வேண்டும் என கோரிய துரைமுருகனுக்கு பதிலளித்த சபாநாயகர், முதல்வர் உரிய பதிலை அளித்ததால் விசாரணை ஆணையம் தேவையில்லை என கூறி விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.