மதுரையில் சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால் சாலையோர மரங்கள் சாய்ந்ததுடன், வாகனங்கள் மற்றும் கட்டிடங்களும் சேதமடைந்தன. கோவை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.
மதுரை திருநகர் பகுதியில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. அப்போது, சூறாவளிக் காற்று சுழன்றடித்ததால், சாலையோர மரங்களும், நூற்றுக்கும் மேற்பட்ட மின் கம்பங்களும் சாய்ந்தன.
இதில் கார்கள், இருசக்கரவாகனங்கள், செல்போன் கோபுரம் உள்ளிட்டவை சேதமடைந்தன. தனியார் பாலர் பள்ளி, சில வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்களும் பாதிப்புக்குள்ளாயின. சுமார் இரண்டு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். சில பகுதிகளில் பொதுமக்களே சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், மக்கள் அவதிப்பட நேர்ந்தது.
கோவையில் மாலை நேரத்தில் பெய்த மழையால், காற்றில் ஈரப்பதம் ஏற்பட்டு வெப்பம் தணிந்தது. கடந்த 15 நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழையால், கோவையில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, கமுதி பகுதிகளி மாலை நேரத்தில் மிதமான மழை பெய்தது. கடும் வெப்பத்தில் தவித்து வந்த அப்பகுதி மக்களுக்கு இந்த மழை சற்றே ஆறுதல் அளித்தது.
கரூரில் தவுட்டுப்பாளையம், வேலாயுதம்பாளையம் பகுதிகளில் பெய்த கோடைமழை அரைமணி நேரம் நீடித்தது. இதனால், பூமி நனைந்து குளிர்ந்த காற்று வீசியது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்