போலீஸாரின் கைது வேட்டைக்கு பயந்து தூத்துக்குடியில் ஆண்கள் வெளியேறியதால் காலியான கிராமங்கள்!
போலீஸாரின் கைது நடவடிக்கை தூத்துக்குடி வன்முறை சம்பவங்கள் தொடர்பாக தொடர்கிறது. இதற்கு பயந்து கிராமங்களில் உள்ள ஆண்கள் வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர். தூத்துக்குடி வட்டார கிராமங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும், விரிவாக்கத்தை தடுத்து நிறுத்தக் கோரியும், அந்த ஆலையைச் சுற்றியுள்ள அ.குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம், பண்டாரம்பட்டி, மடத்தூர், சில்வர்புரம், சங்கரப்பேரி, தபால் தந்தி காலனி உள்ளிட்ட 15 கிராமங்களில் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தின் 100-வது நாளை முன்னிட்டு கடந்த மே 22-ம் தேதி நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் பயங்கர கலவரத்தில் முடிந்தது. கல்வீச்சு, தீவைப்பு, பெட்ரோல் குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் அரங்கேறின. மேலும், போலீஸார் தடியடி, கண்ணீர் புகைக்குண்டு, துப்பாக்கிச் சூடு பிரயோகம் நடத்தினர். இதில், 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இப்பகுதி காவல் நிலையங்களில் 243 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கைது நடவடிக்கை தீவிரம்:
தற்போது, பதற்றம் தணிந்து சகஜநிலை திரும்பியுள்ள நிலையில், கலவரத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள், புகைப்படங்களைக் கொண்டு போலீஸார் கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதுவரை, 250 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பலர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். சிறையில் உள்ளவர்களில் 6 பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
வெறிச்சோடிய கிராமங்கள்:
தினமும் குறைந்தது 10 பேரை போலீஸார் விசாரணைக்காக பிடித்துச் செல்கின்றனர். அதில் சிலரை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். இந்த நடவடிக்கை கடந்த சில நாட்களாக தீவிரமாக நடந்து வருகிறது. தனிப்படை போலீஸார் நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளையில்தான் தங்கள் கைது நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற அனைத்து கிராமங்களிலும், தூத்துக்குடி நகரப் பகுதிகளிலும் இந்த கைது நடவடிக்கை தொடர்கிறது.
நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளையில் போலீஸார் வந்து வீட்டுக் கதவை தட்டுவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
போலீஸாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து பெரும்பாலான கிராமங்களில் ஆண்கள் வெளியூர்களுக்கு சென்றுவிட்டனர். வீடுகளில் இருக்கும் பெண்களும் மிகுந்த அச்சத்துடனேயே இருக்கின்றனர். கிராமங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.