போலி பட்டுப் புடவைகளால் நசிந்து வரும் ஒரிஜினல் காஞ்சிப் பட்டு!
காஞ்சிபுரம் கைத்தறி பட்டு உற்பத்தியாளர்கள் போலி பட்டுப் புடவைகளின் வரவால் தங்களது தொழில் மெல்ல மெல்ல நசிந்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
பட்டு என்று சொன்னால் காஞ்சிபுரம்தான் முதலில் எல்லோருக்கும் நினைவில் வரும். மொழி கடந்து, மாநிலம் கடந்து, உலகம் முழுக்கவுள்ள பட்டுப் பிரியர்களால் விரும்பப்படும் காஞ்சிபுரம் பட்டு, இன்று போலிகளின் வரவால் மெல்ல மெல்ல புகழ் மங்கத் தொடங்கியிருக்கிறது.
நெய்யும் முறை, ஜரிகைத் தரம், கூடுதல் எடை போன்ற விஷயங்கள் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளை மற்ற ஊர் சேலைகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன. இன்றைக்கு இடைத்தரகர்கள் பலர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் விசைத்தறி மூலம் தயாராகும் போலி பட்டு சேலைகளை சந்தைக்குள் கொண்டு வந்து, அதனை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக பாரம்பரிய கைத்தறி நெசவாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் உண்மையான காஞ்சிபுரம் கைத்தறி பட்டுச் சேலைகளின் விற்பனை பெருமளவு சரிந்து, நெசவாளர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வறுமையின் பிடிக்குள் தள்ளப்பட்டு வருகின்றனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சட்டமன்ற மானிய கோரிக்கையிலும் தங்களுக்கான கூலி உயர்வு குறித்து அறிவிப்புகள் வெளிவரவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர் கூட்டுறவு சங்கங்களைச் சேர்ந்த நெசவாளர்கள். தொழில் நலிவடைந்து வருவதால், பல நெசவாளர்கள் வேறு பிழைப்பு தேடி வெளியூர்களுக்கு இடம்பெயர்வதாக அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
8 ஆண்டுகளுக்கும் மேலாக முடிவடையாமல் நீளும் பட்டுப் பூங்கா பணியை விரைந்து முடிக்க வேண்டும், போலி பட்டுப்புடவைகளின் பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே கைத்தறி நெசவாளர்களின் தற்போதைய பிரதான கோரிக்கையாக உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.