போலி சாமியார் கைது..!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் புதையல் எடுத்துத் தருவதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட போலி சாமியார் மீது அடுக்கடுக்கான அதிர்ச்சிகர புகார்கள் குவியத் தொடங்கியுள்ளன. செழிப்பாக வாழ்ந்த பலபேரை கடனாளியாக்கி நடுத்தெருவுக்கு கொண்டு வந்து விட்ட பலே சாமியாரின் மோசடிகளை விவரிக்கிறது இந்த செய்தி
மெல்லிய தேகம், ஒன்றும் தெரியாத அப்பாவி முதியவர் போன்ற தோற்றம் கொண்ட இந்த நபர்தான், பலரது வாழ்க்கையில் விளையாடிய போலிச்சாமியார் சின்னத்துரை. மதுரை – தூத்துக்குடி நெடுஞ்சாலையில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைதியான வெட்டவெளியில் அமைந்திருக்கும் இந்தக் குடிலுக்கு ‘பை பாஸ் ஐகோர்ட் மகாராஜா, வேம்படி சுடலைமாடசாமி ஆலயம்’ என்று பெயர். இங்குதான், குறி சொல்வது, சூனியம் வைப்பது, புதையல் எடுத்துத் தருவது உள்ளிட்ட பெரும் காரியங்களை போலிச் சாமியார் சின்னத்துரை செய்து வந்துள்ளான்.
தன்னிடம் பிரச்சனை என்று வருபவர்களின் பேச்சை வைத்தே அவர்களின் பொருளாதாரப் பின்னணியை கணிக்கும் சின்னத்துரை, அதற்கேற்றார்போல் பேசி பணத்தைக் கறப்பதில் கில்லாடி என்று சொல்லப்படுகிறது. அப்படி ஒருநாள் தன்னிடம் குறிகேட்க வந்த காரியாபட்டியைச் சேர்ந்த சோப்பு வியாபாரி செல்வத்திடம், வீட்டில் இருக்கும் புதையலை எடுத்து தருவதாக கூறி, 2 லட்ச ரூபாய் பெற்று மோசடி செய்துள்ளான். இதுதொடர்பான புகாரில், காரியாபட்டி காவல்நிலைய போலீசார், போலி சாமியார் சின்னதுரையை கைது செய்தனர்.
சின்னத்துரை கைது செய்யப்பட்டதை அறிந்த, அவனால் பாதிக்கப்பட்ட மேலும் பலர் தற்போது வெளியே வரத் தொடங்கியுள்ளனர். அவர்களை சின்னத்துரை தனது அரசியல் பின்புலத்தை வைத்து மிரட்டி வந்திருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கணவருக்கு உடல்நலம் சரியில்லை என்பதற்காக சின்னத்துரையை தேடி வந்த பெண் ஒருவர், தனது வீடு, வாகனங்கள் எல்லாவற்றையும் விற்று போலி சாமியார் அவனிடம் 23 லட்ச ரூபாய் வரை கொடுத்து ஏமாந்ததாக அதிர்ச்சியூட்டினார்.
திருச்சுழியில் டீக்கடை நடத்தி வரும் குருசாமி என்பவர், பட்டப்படிப்பு முடித்த தன் மகனுக்கு வேலை கிடைக்கவில்லை என்று கூறி போலிச் சாமியார் சின்னத்துரையை அணுகியுள்ளார். சிறுகச் சிறுக 6 லட்ச ரூபாய் வரை கறந்த சின்னத்துரை, பணத்தை அவர் கேட்டபோது, வழக்கம்போல அடியாட்களை வைத்து மிரட்டியுள்ளான்.
இப்படி இன்னும் பலரையும் பல விதங்களில் ஏமாற்றி போலிச் சாமியார் சின்னத்துரை லட்சக்கணக்கில் ஏமாற்றியதாகத் கூறப்படுகிறது. சின்னத்துரையிடம் விசாரணை நடத்தினால் மேலும் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவரும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
அறிவியலும் தொழில்நுட்பமும் அசுர வளர்ச்சி அடைந்து வரும் இன்றைய காலகட்டத்திலும் இப்படிப்பட்ட போலி சாமியார்களை நம்பி ஏமாறும் அப்பாவிகளும் இருப்பதுதான் வேதனை.