துப்பாக்கி குண்டுகளுக்கு உறவுகளை பரிகொடுத்து கதறிக் கொண்டிருப்பவர்களுக்கு ஆறுதல் கூற நம்மிடம் வார்த்தையில்லை; சொல்வதற்கு திராணியுமில்லை. பதினேழு வயதுச் சிறுமி ஸ்னோலின் குடும்பம் சிதைந்து கிடக்கிறது. அவரது அம்மா வனிதா தான் இவ்வாறு கேட்கிறார்: “போருக்கா போனோம்; பொதுக் காரியத்துக்குத் தான போனோம்…. அரசாங்கத்த எதிர்த்தா நாங்க போராடினோம், இல்லையே! ஒரு தனியார் முதலாளிக்காக இத்தனை பேர சுட்டுக் கொல்லனுமா?” இல்லை தாயே….முதலாளிகளுக்காகத் தான் இந்த அரசாங்கம் நடக்கிறது அல்லது அரசாங்கத்தையே அந்த முதலாளிகள் தான் நடத்துகிறார்கள் என்பதை அந்த அன்புத் தாய்க்கு எப்படிப் புரியவைப்பது….?
ஏசப்பா வழி நடத்துவார்!
“காலையில எட்டு மணிக்கே சர்ச்க்கு போயிட்டோம். முன் வாசல்ல போலீஸ் வந்து தடுத்தாக; ஒட்டு மொத்த சனமும் பின் வாசல் வழியா நடக்கத் துவங்கினோம். இப்படி பல இடங்களில் இருந்து புறப்பட்டு வந்தாக. சண்டைக்கு போரவங்க கைக்குழந்தைகளையும் தூக்கிக்கிட்டு குடும்பத்துடனா போவோம்…எங்க வீட்ல அவ்வளவு பேரும் போனோம்.” ஆமாம், அந்தக் குடும்பத்தில் வனிதா,அவரது கணவர் ஜாக்சன், இரண்டு மகன்கள் மூத்தவர் காட்வின், இளையவர் மேக்டன், மகள் ஸ்னோலின் ஆகியோர் இருக்கிறார்கள். இதில் காட்வின் மனைவி மெரில்டா,அவர்களின் இரண்டு வயது குழந்தை காட்ஸ்லினா,ஆறு மாத குழந்தை ஜிபான்ஸி ,மகள் ஸ்னோலின் என பெண்கள் எல்லாம் ஒன்றாகத் தான் புறப்பட்டுள்ளனர்.
பொதுக் காரியத்திற்கு குடும்பத்துடன் புறப்படுகிற பண்பை என் தேசம் மீளப் பெற்று வருகிறது. வனிதா தொடர்கிறார்: “வி.வி.டி சிக்னல் வரை ஒரு பிரச்சனையும் இல்லை. கலெக்டர் அலுவலகத்த கண்ணில் பார்க்கும் தூரத்தில் வந்துட்டோம். எங்களுக்கும் கலெக்டர் அலுவலகத்திற்கும் இடையில போலீஸ் மட்டும் தான் கூட்டமா இருந்துச்சு. ஆனா நாங்க போறதுக்கு முன்பே போலீஸ் கட்டுப்பாட்டுல இருந்த கலெக்டர் ஆபீஸ் பகுதிக்குள்ள தீயும்,புகையுமா இருந்துச்சு… அது எப்படி வந்தது…? தொன்னூத்தி ஒன்பது நாளில் ஒரு நாளும் பேச வராத அரசாங்கம் இப்போது போலீச வைச்சு தடுக்குது.சாத்தான் வழி மறைக்கும்,ஏசப்பா வழி நடத்துவார்னு சொல்லிக்கிட்டே தைரியமா போனோம். கையில தண்ணி பாக்கெட் மட்டும் தான் வச்சிருந்தோம்…
திடீருன்னு துப்பாக்கியால் சுடுற சத்தம். மக்களெல்லாம் சிதறி ஓடுதுக. மீண்டும் மீண்டும் துப்பாக்கியால சுட்டாங்க. ஒரே புகையும்,கூப்பாடுமா மாறிப் போச்சு. அந்த நேரத்தில தான் எம்மவள சுட்டுப் போட்டானுக. கைப்பிள்ளகள தூக்கிகிட்டு நானும், மூத்தவளும் திக்குத் தெரியாம திரியரோம். எங்கள முந்திக்கிட்டு கலெக்டர் ஆபீஸ் கேட்டுக்குள்ள போயிருந்த எம்மவ பின் மண்டயில சுட்டிருக்கானுக,அந்த குண்டு வாய் வழியா பிச்சுக்கிட்டு வந்திருச்சு. அம்மா, அம்மான்னு அழகுபோல எம்மவ பேசுவா, அந்த வாய் சிதைந்து போச்சு. ஸ்டெர்லைட்ட மூடுனாதான் அவ ஆத்துமா சாந்தி அடையும், அது நடக்கனுமய்யா… அது வரை தூத்துக்குடியில ஒரு ஈ,எறும்பு கூட உணர்வு பெற்றுப் போராடும்… குமுறலுடன் கதறுகிறார் வனிதா.
ஏன் சுட்டீர்கள்?
ஏன் சுட்டீர்கள்? ஏன் சுட்டீர்கள்? தூத்துக்குடி முழுவதும் எதிரொலிக்கும் கேள்வி இதுதான். கூட்டத்தை எதிர்கொள்ள, வன்முறையைக் கட்டுப்படுத்த என்கிற மாநில முதல்வரே… நீங்கள் சொல்வது உண்மையானால் 22 ம் தேதி மாலையிலும்,23 ம் தேதியும் ஏன் துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து நடத்தி மனித உயிர் குடித்தீர்கள்?திரேஸ்புரம் முக்கு ரோட்டின் அருகிலுள்ள சாலைக் கல்லில் உறைந்து கிடக்கும் எங்கள் ஜான்சியின் இரத்தம் எழுப்பும் கேள்வி இது, ஏன் சுட்டீர்கள்?… காலையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற ஆட்சியர் வளாகத்தில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திரேஸ்புரம். காலையில் நிகழ்த்தப்பட்ட கொடும்பாதகம் குறித்து அச்சத்துடன் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் வாழும் பகுதியில் கூடியிருந்த சிறிய கூட்டம் அது. பிசாசு போல் ஊளையிட்டவாறு ஐந்தாறு போலீஸ் வாகனங்கள் வருகின்றன. முக்கு ரோட்டில் வேகம் குறைந்து நிற்கின்றன. ஆத்திரத்தோடு வெறும் கையை உயர்த்தி திட்டுகிறார் ஜான்சி. அவ்வளவு தான் விருட்டென்று பாய்ந்து வந்த தோட்டா ஜான்சியின் மண்டை ஓட்டை சிதறடிக்கிறது. ஒரு நொடி கூட தாமதிக்காமல், துளியும் அதிர்ச்சியின்றி ஐந்தாறு போலீசார் இறங்கி அருகிலிருந்த பிளக்ஸ் பேனரைக் கிழித்து ஜான்சியின் உடல் மீது சுற்றி தூக்கிச் செல்கிறார்கள். அந்த மனித மிருகங்களோடு செல்ல மறுத்து ஜான்சியின் மூளை மட்டும் தனியே விழுகிறது. போலீசைப் பார்த்து கேள்வி எழுப்புகிறது… ஏன் சுட்டீர்கள்…?
பாலூட்ட, சோறூட்டப் போவது யார்?
கொல்லப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்திற்குப் பின்னாலும் சோகம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 38 வயது சண்முகம். வயது முதிர்ந்த பாலையா, வள்ளியம்மாள் தம்பதியினரின் ஒரே மகன். மாசிலாமணிபுரத்தில் புது வீடு கட்டி குடியேறியுள்ளனர். ஆசிரியர் குடியிருப்பில் உள்ள தங்களது பழைய வீட்டில் நாய்களும்,பூனைகளும் வளர்க்கிறார் சண்முகம். திருமணம் செய்து கொள்ளாத சண்முகத்திற்கு அவை தான் வாழ்வின் மீதான பற்றுதலைக் கொடுக்கிறது.22 ம் தேதி வழக்கம் போல் தனது செல்லப் பிராணிகளுக்கு பாலூட்ட போனவரைத் தான் மார்பில் சுட்டு சாலையில் கிடத்தியுள்ளது போலீஸ்.தங்களது உயிர்த்தோழன் செத்துப் போன செய்தியை அவைகளுக்கு அறிவிக்கப் போவது யார்?
சிலோன் காலனியின் சாலை சந்திப்பில் ஈழத்தமிழனின் உயிர்த்தியாகம் என்கிற எழுத்துக்களோடு ஒரு பிளக்ஸ் பேனர் கந்தையாவின் புகைப்படத்துடன் இருக்கிறது. வீட்டுக்கு யார்யாரோ கூட்டம் கூட்டமாக வருவதையும்,கதறியழும் தாயாரையும் பார்த்துக் கொண்டேயிருக்கிறார்… திடீரென எழுந்து போய் பேனரில் இருக்கும் கந்தையாவின் முகத்தைப் பார்த்துவிட்டு ஒன்றும் விளங்காமல் நம்மைப் பார்த்து சிரிக்கிறார் கந்தையாவின் 27 வயது மனவளர்ச்சியற்ற மகன் ஜெகதீசன். தட்டில் பிசைந்து கவளம் கவளமாக சோறூட்டும் கந்தையா நடு மார்பில் குண்டு பாய்ந்து மருத்துவமனையின் பிணவறையில் கிடக்கிறார். அவரது சடலத்தை வீட்டுக்கு எடுத்துவரும் போது ஜெகதீசன் அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறானோ…?
கொலை தான் குறி:
கொலையுண்டு போன எவருக்கும் இடுப்பிற்கு கீழே காயமில்லை. தொழில்நுட்பக் கல்வி பயின்றுள்ள,மாநில அளவிலான குத்து சண்டை வீரர் 22 வயது ரஞ்சித் குமார் பின்னந்தலையில் குண்டு பாய்ந்து இறந்துள்ளார். நெற்றியில் துப்பாக்கி குண்டு துளைக்கப்பட்ட 20 வயது இளம் பட்டதாரி கார்த்திக், பகல் பொழுது முழுவதும் போதிய சிகிச்சை கிடைக்காமல் மரணத்தை எதிர்கொண்டுள்ளார். லூர்தம்மாள்புரத்தை சேர்ந்த கிளஸ்டன், நெஞ்சில் குண்டு பாய்ந்து இறந்துள்ளார். திருமணம் ஆகி மூன்று மாதங்களே ஆன மணிராஜ் நெற்றியில் சுடப்பட்டு மரணம் அடைந்துள்ளார்.
மாப்பிள்ளையூரணி பகுதியை சேர்ந்த 22 வயது காளியப்பன் 23 ம் தேதி பிற்பகலில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியானவர். இவரது முதுகில் பாய்ந்த தோட்டா மார்பு எலும்புகளை மொத்தமாக நொறுக்கியுள்ளது. ஆசிரியராக பணிபுரியும் தனது மனைவி மரிய கல்பனாவை அழைத்து வரச் சென்ற அன்னை வேளாங்கண்ணி நகரின் 46 வயது அந்தோணி செல்வராஜ் மார்பில் குண்டு பாய்ந்து இறந்துள்ளார். மதுரை மாவட்டம் ஆரியபட்டி, மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த ஜெயராமன் தலையில் குண்டு பாய்ந்து இறந்துள்ளார். குறுக்குச் சாலை இராமச்சந்திரபுரம் 42 வயது தமிழரசன். இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.புரட்சிகர இளைஞர் முன்னணியை சேர்ந்தவர். நெற்றியில் குண்டு பாய்ந்து மரணத்தை தழுவியுள்ளார்.
இருவப்பபுரம் 42 வயது செல்வசேகர், திருமணம் செய்து கொள்ளாதவர். 22 ம் தேதி போலீஸ் அராஜகத்தை செல்போனில் படம் எடுக்க முயற்சித்தார். காவல்துறையினர் அடித்தே கொலை செய்தனர். தலை மற்றும் மார்பில் தான் பலமான காயங்கள் இருந்தன. கூட்டத்தைக் கலைப்பது அல்ல, கொலை செய்வது தான் போலீசின் நோக்கமாக இருந்துள்ளது. இந்தக் கொலைகளின் வழியாக ஒவ்வொருவருக்கும் உயிர் அச்சத்தை ஏற்படுத்தி ஸ்டெர்லைட்டின் வாசல் நிரந்தரமாக திறந்திருக்கும் படி செய்வது தான் காக்கிச் சட்டை காவலாளிகளின் இலக்கு.
குண்டு மழையும் சுழன்ற லத்திகளும்:
கொல்லப்பட்டவர்களின் துயரம் இதுவென்றால்,வேட்டை நாய்களால் குதறப்பட்டது போல் இரணமாகிப் போன உடலோடு சில நூறு பேர் அரசு மருத்துவமனைகளிலும் பல நூறு பேர் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்களில் நூலிழையில் உயிர்த்தப்பியவர்களும் உண்டு. தனியார் மருத்துவமனைகள் மனிதாபிமானத்துடன் அகற்றிய குண்டுகளின் எண்ணிக்கை எதில் சேரப்போகிறது? இரண்டு நாள் தனியார் மருத்துவமனை சென்றுவிட்டு கையில் காசில்லாமல் வலியை பொறுத்துக்கொண்டு இருப்பவர்கள் பல நூறு பேர்.
விரட்டி விரட்டி தடி கொண்டு தாக்கப்பட்டவர்களின் துயரம் சொல்லி மாளாது. உடல் முழுவதும் கொடுங்காயங்கள் அல்லது கை,கால் முறிவு. பிடித்தவுடன் கை,கால்களை முறித்து விடுவது, அல்லது பத்து பேருக்கு குறையாமல் சுற்றி நின்று கொண்டு கண்மண் தெரியாமல் அடித்துத் துவைப்பது என்பதே போலீசின் பணியாக இருந்தது.
மரணத்திற்கு மதிப்பு வேண்டும்;
இவ்வளவு கொடூரங்களை அரங்கேற்றிய காவல்துறை தான் இப்போது கூனிகுறுகி நிற்கிறது. மக்கள் தனித்தனியே நடமாடுகிறார்கள்.போலீஸ் தான் கூட்டமாக போய் வருகிறது. காக்கி உடையைப் பார்த்தாலே மக்களுக்கு குமட்டிக்கொண்டு வருகிறது. மாநில முதல்வரும், துணை முதல்வரும், அமைச்சர் பெருமக்களும் தூத்துக்குடிக்கு வழி தெரியாமல் விழிபிதுங்கித் திரிகிறார்கள்.துப்பாக்கிச் சூடுகளும், கொலைகார லத்திகளும் தூத்துக்குடி மக்களின் மன உறுதியை கொஞ்சமும் அசைக்கவில்லை. தூத்துக்குடி ஒன்றுபட்டு நிற்கிறது. அவர்களின் உணர்வு ஒன்றே… “எங்க பிள்ளைகளின் மரணத்திற்கு மதிப்பு வேண்டும்… ஸ்டெர்லைட்டை இழுத்து மூடு!”
கஜகஸ்தான்: கஜகஸ்தானில் 72 பயணிகளுடன் சென்ற விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இதில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அஜர்பைஜான்…
ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நள்ளிரவில் நடத்திய வான்வழி தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். ஏற்கெனவே…
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…