பொது இடங்களில் முதியோருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்! முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Default Image

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தையொட்டி  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முதுமை என்பது தவிர்க்க இயலாதது. காலத்தின் நெடிய பாதையில் நாம் அனைவரும் ஒவ்வொரு நொடியும் முதுமையின் திசையை நோக்கியே நகர்ந்து கொண்டு இருக்கின்றோம். முதுமையை மதித்தலே ஆரோக்கியமான சமூகத்தின் அடையாளம். நம்மை சுமந்தவர்களை நாம் சுமப்பது என்பது நமது கடமையாகும்.

முதுமை என்பது இன்னொரு குழந்தை பருவம். முதியோர் நம்மிடம் எதிர்பார்ப்பது உண்மையான அன்பையும் பாசத்தையும் மட்டுமே. வாழ்க்கையின் மேடுபள்ளங்களை கடந்து களைத்த பாதங்களை தழுவுதல் இளையவர்களின் தலையாய கடமையாகும்.

முதியோர் நலன் மீது மிகுந்த அக்கறையும், பாசமும் கொண்ட அம்மாவின் அரசு அவர்களுக்கென பல்வேறு சிறப்பு நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் சுமார் 15.50 லட்சம் ஆதரவற்ற முதியோருக்கு மாதந்தோறும் முதியோர் ஓய்வூதியமாக ரூபாய் 1000 வழங்கப்படுகிறது.

மூத்த குடிமக்களுக்கான இலவச அரசுப் பேருந்து பயணச் சலுகை திட்டம் மூலம் சென்னையில் 3.12 லட்சம் மூத்த குடிமக்கள் பயனடைந்துள்ளனர்.

அரசு முதியோர் இல்லங்களில் உள்ள முதியோருக்கு வழங்கப்படும் உணவு மானியம், 300 ரூபாயிலிருந்து 1200 ரூபாயாக உயர்த்தப்பட்டு, 2016-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே முதன் முறையாக அரசு உதவிபெறும் முதியோர் இல்லங்களில் வசிக்கும் முதியோருக்கு, நிமோனியா நோய்க்கு எதிரான தடுப்பூசி மருந்து அளிக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு 1.65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் சபை ஒவ்வொரு ஆண்டும் ஜூன்15-ந்தேதியை முதியோருக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக அனுசரித்து வருகிறது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசும் இவ்வாண்டு முதல், ஜுன் 15-ந்தேதியை முதியோருக்கெதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக அனுசரிக்க உள்ளது.

இதற்காக துண்டு பிரசுரங்கள் அச்சடித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி அரசு அலுவலகங்களில் உறுதிமொழி எடுக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதில் “முதியோரை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும், மனோரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன் எனவும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பேன் என்றும் பொது இடங்களான மருத்துவமனை, வங்கி, பேருந்து போன்ற இடங்களில் முதியோருக்கு முன்னுரிமை அளித்து அவர்களுக்கெதிரான கொடுஞ்செயல்கள், வன்முறைகள் எவ்விதத்திலும் இழைக்கப்படுவதனை தடுத்திட பாடுபடுவேன்’’ என உறுதிமொழி எடுக்குமாறு உங்கள் அனைவரையும் உளமாற கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்