பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பிப்ரவரி 1 முதல் சிபிஐ (எம்) தொடர் மறியல்
அனைத்து தரப்பு மக்களையும் கடுமையாக பாதிக்கும் அநியாய பேருந்து கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மாணவர்களும், அனைத்துப் பகுதி பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் போராடி வருகின்றனர். குறிப்பாக லட்சக்கணக்கான மாணவர்கள் கட்டண உயர்வை ரத்து செய்யும் வரை தொடர்ந்து போராடுவது என்ற உறுதியோடு வீதியில் இறங்கி வீரஞ்செறிந்த போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நியாயமானக் குரலை ஏற்று கட்டண உயர்வை ரத்து செய்வதற்கு பதிலாக, அடக்குமுறையை எடப்பாடி அரசாங்கம் ஏவி வருகிறது. ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர், சிறைக்கொட்டடியில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் மாணவர் – வாலிபர் தலைமை மீது குறிவைத்து வேட்டையாடும் வகையில் கடுமையான கிரிமினல் வழக்குகளை புனைந்து சிறையில் அடைக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்துவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. தமிழக அரசின் இத்தகைய ஒடுக்குமுறை நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
இந்த மறியல் போராட்டத்தில் அனைத்து பகுதி மக்களும் பங்கேற்று போராட்டத்தை வெற்றிகரமாக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
– ஜி. ராமகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்
27.01.2018