பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம்: தலைமறைவாக இருந்த ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி நீதிமன்றத்தில் சரண்!
சி.பி.சி.ஐ.டி.க்கு சாத்தூர் நீதிமன்றம்,பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகனை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. இதனிடையே இந்த வழக்கில் தேடப்பட்ட ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரி மாணவிகள் 4 பேரை, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் உயர் பதவியில் இருப்பவர்களுக்காக தவறான பாதைக்கு அழைத்த கணித துறை பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.
நிர்மலா தேவியிடம் சிபிசிஐடி அதிகாரிகள் நடத்திய விசாரணையின் அடிப்படையில், காமராஜர் பல்கலைக்கழக வணிக மேலாண்மை பேராசிரியர் முருகன் நேற்று கைது செய்யப்பட்டார். ஒருநாள் நீதிமன்ற காவலுக்குப் பின் சாத்தூர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அப்போது முருகனை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதித்துறை நடுவர், 5 நாட்கள் காவலில் வைத்து முருகனை விசாரிக்க அனுமதி வழங்கினார். இதை அடுத்து விருதுநகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு முருகன் அழைத்துச் செல்லப்படுகிறார். இந்த நிலையில், 5 நாட்கள் காவல் முடிவடைந்ததால், நிர்மலா தேவி இன்று பிற்பகலில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுகிறார். அவரது காவலை நீட்டிக்க அனுமதி கோரி சிபிசிஐடி அதிகாரிகள் மனுத்தாக்கல் செய்யவுள்ளனர்.
இதனிடையே இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த காமராஜர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை இருநாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க முதலில் உத்தரவிடப்பட்ட நிலையில், சிபிசிஐடி ஆட்சேபனை தெரிவித்ததால் ஒருநாளாக குறைக்கப்பட்டது. நாளை அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பின்னர் அவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.