“பேரறிவாளன் எந்த குற்றமும் அற்றவர்” – மதிமுக பொதுச்செயலாளர் வைகோ!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நீண்டகால சட்டப்போராட்டத்துக்கு பிறகு, கிட்டத்தட்ட 31 ஆண்டுகளுக்கு சிறை கம்பிகள் இடையே வாழ்ந்து வந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. பேரறிவாளனின் விடுதலை தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது.
161-வது சட்ட பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தினால், சட்டப்பிரிவு 142-ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கலாம். உச்ச நீதிமாமன்றத்தின் தீர்ப்புக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வரவேற்பு அளித்து, பேரறிவாளன் விடுதலையை கோவை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
இந்நிலையில்,பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோர் சென்னையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை அவரது வீட்டில் சந்தித்துள்ள நிலையில்,பேரறிவாளன் எந்த குற்றமும் அற்றவர் என வைகோ தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:
“பேரறிவாளன் நிரபராதி,எந்த குற்றமும் அற்றவர்,ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அவருக்கு எந்த தொடர்பும் கிடையாது.இறுதியில் நீதி வென்றது. எனினும்,தமிழகத்தின் ஆளுநர் அரசாங்கத்தின் முடிவுகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல்,செயல்படுத்தாமல் இருந்தார்.இறுதியில் உச்சநீதிமன்றம் தலையிட்டு பிரிவை பயன்படுத்தி விடுதலை செய்து அவருக்கு வாழ்வு கொடுத்தாலும் அவரது இளமைக்காலம் அழிந்து விட்டது,வசந்த காலம் எல்லாம் போய்விட்டது.ஆனால் அதற்காக அவரது தாயார் அற்புதம்மாள் அவர்கள் மிகப்பெரிய வீராங்கனையாக போராடி விடுதலையை பெற்று தந்துள்ளார்.
இந்த நிலையில் யாராக இருந்தாலும் சோர்ந்து விடுவார்கள், கவலையில் ஆழ்ந்து விடுவார்கள்.ஆனால் அவை ஏதும் இல்லாமல் அற்புதம்மாள் அவர்கள் போராடி எமன் வாயிலில் இருந்து மகனை மீட்டுக் கொண்டு வந்துவிட்டார்.அதே சமயம்,இதனடிப்படையில் மீதமுள்ள 6 பேரும் விடுதலை ஆகிவிடுவார்கள்.இருப்பினும்,அவர்களது வாழ்க்கை பெரும் பகுதி அழிந்து விட்டது”,என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பேரறிவாளன்:”அண்ணனுக்கு நன்றி சொல்வதற்காக நானும் அம்மாவும் வந்துள்ளோம்.நான் சிறைக்கு செல்லும் முன் இதே வீட்டிற்கு வந்துள்ளேன்,சாப்பிட்டுள்ளேன்.சிறையில் ஒரே காலத்தில் இருந்துள்ளோம்.அண்ணனுடன் இருந்த மகிழ்ச்சியான தருணம் அந்த காலம்.மேலும்,எனக்கு தூக்கு தண்டனை வரும்போது உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி அவர்களிடம் சென்று எங்களுக்காக அண்ணன் பேசினார் ,மனு கொடுத்தார்.அதன்பிறகு வாஜ்பாய் அவர்களிடமும் மனு கொடுத்தார்.எனவே அவருக்கு நன்றி சொல்ல நானும் அம்மாவும் தற்போது வந்துள்ளோம்”,என்று தெரிவித்தார்.