பூந்தமல்லி,
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள மூன்றாம்கட்டளை திருவள்ளுவர் நகர், அங்கனீஸ்வரர் கோவில் தெருவில் வசித்து வருபவர் விஜய் (வயது 30). இவர், சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு தனியார் வங்கியில்வேலை செய்து வருகிறார்.
இவருக்கு அபிராமி (25) என்ற மனைவியும் , அஜய் (7) என்ற மகனும், கார்னிகா (4) என்ற மகளும் இருந்தனர்.
நேற்று முன்தினம் விஜய், நிலுவையில் உள்ள ஆவணங்களை முடிக்க மதியம் வங்கிக்கு சென்றுவிட்டார்.வங்கியில் வேலை அதிகம் இருந்ததால் விஜய், நேற்று முன்தினம் இரவு வங்கியில் தங்கி விட்டார். நேற்று அதிகாலையில் அவர், தனது வீட்டுக்கு வந்தார். வீட்டின் வெளியே அபிராமியின் மொபட் இல்லை. எனவே அருகில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று இருக்கலாம் என்று கருதிய விஜய், தனது மாமியார் வீட்டுக்கு சென்றார்.ஆனால் அபிராமி அங்கு வரவில்லை என்று அவரது பெற்றோர் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த விஜய், தனது மனைவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார். அது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது.
இதனால் பதறிப்போன விஜய், மீண்டும் தனது வீட்டுக்கு சென்று பார்த்தார். வீட்டின் கதவு சாத்தப்பட்டு, வெளிப்புறமாக தாழ்ப்பாள் மட்டும் போடப்பட்டு இருந்தது. விஜய், கதவை திறந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.அங்கு தனது 2 குழந்தைகளும், வாயில் நுரை தள்ளிய நிலையில் கட்டிலில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். குழந்தைகளின் உடலை பார்த்து விஜய் கதறி அழுதார். அவரது செல்போனுக்கு விஜய், தொடர்பு கொண்ட போது மீண்டும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.
இதையறிந்த காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.தொடர்ந்து காவல்துறை அவரது செல்போன் சிக்னலை வைத்து போலீசார் விசாரித்தபோது, கடைசியாக கோயம்பேடு பஸ் நிலையத்தை காட்டியது. எனவே கோயம்பேடு சென்று அங்கிருந்து பஸ்சில் வெளியூர் தப்பிச்சென்று இருக்கலாம் என தெரிய வந்தது.குழந்தைகளை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய அபிராமியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் நாகர்கோவில், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு விரைந்தனர்.
பெற்ற குழந்தைகளை தாயே பாலில் விஷம் வைத்து கொன்ற சம்பவம் அங்கே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது..
DINASUVADU