பெண்கள் இனி பயப்படவேண்டாம்: பாலியல் வன்கொடுமையைக் கண்டறிய உபகரணங்கள் ..!
மருத்துமனைகளுக்கும், காவல்துறைக்கும் பாலியல் வல்லுறவைக் கண்டறியும் நவீன உபகரணங்கள் வழங்கப்பட உள்ளதாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.நாட்டில் பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், குற்றங்களை உடனடியாக பரிசோதனை செய்து கண்டறிவதற்கு உதவியாக இருக்கும் என்ற அடிப்படையில் இந்த உபகரணங்கள் அளிக்கப்படுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.
‘நிர்பயா நிதி’ எனும் வல்லுறவு தடுப்பு நிதியுதவியின் மூலம் இந்த உபகரணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த உபகரணங்களில் வல்லுறவுக்கு உள்ளான பெண்ணிடமிருந்து இரத்தம் மற்றும் விந்து மாதிரிகளை எடுக்கத் தேவையான கருவிகள் இடம்பெற்றிருக்கும்.
அதனைக் கொண்டு எடுக்கப்படும் மாதிரிகள், உடனடியாக பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டு, அதிகபட்சமாக 2 மாதங்களில் முடிவுகள் பெறப்படும். இதற்காக சண்டிகரில் தற்போது பரிசோதனைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக மும்பை, சென்னை, புனே, போபால், கவுகாத்தி ஆகிய இடங்களில் பரிசோதனைக் கூடங்கள் அமைகின்றன.